தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை பார்வையிட்ட மாநகராட்சி அரசுப்பள்ளி மாணவர்கள் தஞ்சாவூர்:இந்தியா முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் நூறு இடங்களில் தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 11 இடங்கள் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டதில் தஞ்சாவூரும் ஒன்று. தஞ்சாவூர் நகராட்சி, கடந்த அதிமுக ஆட்சியில் 2014 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசால் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டது.
இதில் மாநகராட்சி முதல் பெண் மேயராக சாவித்திரி கோபால் (அதிமுக) பதவி வகித்தார். பின்னர் ராமநாதன் (திமுக) 2022 ஆண்டு முதல் தற்போது வரை மேயராக பதவி வகித்து வருகின்றார். இந்நிலையில் மத்திய அரசால் இரண்டு கட்டமாக சுமார் 1,100 கோடி ரூபாய் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று முடிந்தும், சில பணிகள் நடைபெற்றும் வருகிறது.
இந்நிலையில் இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்டு 8 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பணிகள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில், தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் கீழ அலங்கம் மாநகராட்சி அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 70 மாணவ மாணவியர்கள் தஞ்சாவூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை பார்வையிட்டனர்.
அதில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அருங்காட்சியகம், ராஜப்பா பூங்கா, மணிக்கூண்டு, காவல் கட்டுப்பாட்டு சிசிடிவி அறை மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தின் (ICCC) பணிகளான மாநகரப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா கட்டுப்பாடு, அவசரகால தொலைபேசி, மழையளவு, மற்றும் மாநகராட்சி தூய்மைப்பணி வாகனங்கள் கண்காணிப்பு, ஆகியவற்றை பார்வையிட்டு அதன் விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி டீம் லீடர் வெற்றிவேல், ஐடி நிர்வாக மேலாளர் சாம் ஸ்டால்வின் உள்ளிட்ட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளான அய்யன்குளம், சாமந்தான்குளம் புனரமைப்பு பணி, பழைய பேருந்து நிலையம் மாற்றி அமைக்கப்பட்டு புதிதாக கட்டும் பணி, வணிக வளாகம், மாநகராட்சி அலுவலகம், மழை நீர் வடிகால், காமராஜ் மார்கெட், சரபோஜி மார்கெட் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
மேலும் தற்போது புதிய பேருந்து நிலையத்தில் ஆம்னி பஸ் பேருந்து நிலையம், கூட்ட அரங்கம், காந்திஜி வணிக வளாகம், சிவகங்கை பூங்கா ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக பணி முடிந்துள்ள தானியங்கி வாகன நிறுத்தம், அறிவியல் பூங்கா ஆகியவை இன்னும் திறக்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா: 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு!