தஞ்சாவூர்: அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கக் கூடிய இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமில சத்து (Iron and folic acid syrup) கொண்ட சத்து மருந்து பாட்டில்கள், கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காலாவதியான நிலையில் குப்பையில் கொட்டப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்குவதற்காக விநியோகித்த இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமில சத்து டானிக் உள்ளடக்கிய சுமார் 200க்கும் மேற்பட்ட பாட்டில்கள் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சேகர் காலனி குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பையில் கொட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக இந்த டானிக் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஊட்டச்சத்துக் குறைபாடாக இருந்தால் இலவசமாக வழங்கப்படுகிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இதனைச் சாப்பிடுவதால் இரத்த சோகை இல்லாமல் இருக்க முடியும். மேலும், கர்ப்பம் தரிப்பதற்கு மூன்று மாதத்திற்கு முன்பே இந்த இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமில சத்து தேவைப்படுகிறது.
இப்படியான சூழ்நிலையில், ஒரு மருத்துவமனையில் குறிப்பிட்ட மருந்து அதிகமாக இருப்பு இருந்தால் அதனை அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் அல்லது தமிழ்நாடு மெடிக்கல் சப்ளை மருந்து கிடங்குக்குத் தகவல் சொல்ல வேண்டும், காலாவதி ஆகும் வரை மருந்தை வைத்திருக்கக் கூடாது என அறிவுறுத்தல் உள்ளதாக சொல்லப்படுகிறது.