தஞ்சாவூர்:திருவையாறு பகுதியைச் சேர்ந்த 28 வயது பட்டதாரி பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் செயலி மூலம் ரூ. 20 ஆயிரம் லோன் வாங்கி இருந்தார். பின்னர் அந்த லோனை அதே மாதத்தில் திருப்பி செலுத்தி விட்டார். இந்நிலையில் இந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு ஒரு வாட்ஸ் அப் குறுந்தகவல் வந்துள்ளது.
அதில், “எனது வங்கி கணக்குக்கு பணம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் உங்களது படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன்” என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தியுள்ளார்.
இருப்பினும் மீண்டும் அதே எண்ணில் இருந்து அந்த பெண்ணின் படத்தை மார்பிங் செய்து அனுப்பப்பட்டுள்ளது. இதனை அந்தப் பெண் பார்த்ததும் அந்த குறுந்தகவல் அழிக்கப்பட்டது. மீண்டும் தொடர்பு கொண்டு பணம் செலுத்த வேண்டும் என்று அந்நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
தொடர்ந்து மிரட்டல் விடுப்பதும், அந்தப் பெண் பணம் அனுப்புவதாக இருந்தார். பல தவணைகளாக ரூ.16 லட்சத்து 31 ஆயிரத்து 340 பணத்தை அந்தப் பெண் செலுத்தியுள்ளார். தொடர்ந்து மிரட்டல் வரவே அந்தப் பெண் தஞ்சை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:’பகலில் டீ மாஸ்டர்; இரவில் காமக்கொடூரன்' - சில்மிஷ இளைஞர் சிக்கியது எப்படி?