பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடிய முன்னாள் அமைச்சர் காமராஜ் தஞ்சாவூர்:அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு மனு செய்திருந்தார்.
இதனையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (ஆகஸ்ட் 25) தீர்ப்பு அளித்தனர். அதில், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், உறுப்பினர்களை நீக்க பொதுக்குழுவிற்கு உரிமை உள்ளது என தீர்ப்பளித்தனர். இதனையடுத்து தஞ்சாவூரில் ரயிலடி பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பால்வளத் தலைவர் காந்தி முன்னிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், வெடி வெடித்தும், பேண்ட் வாத்தியங்கள் இசைக்க உற்சாகமாக கொண்டாடினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், “புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோர் நல்லாசியுடன் அதிமுக என்கிற மாபெரும் இயக்கத்தை புரட்சித் தமிழர் எடப்பாடியார் பொதுச் செயலாளராக இருந்து சிறப்பாக வழி நடத்தி வருகிறார். ஈபிஎஸ் கிளைக் கழக செயலாளராக இருந்து பொதுச் செயலாளராக உயர்ந்தவர், அவரை உயர்த்தியவர்கள் தொண்டர்கள், தானாக தன்னை பொதுச் செயலாளராகவோ, புரட்சித் தமிழர் என்றோ அறிவித்துக் கொண்டவர் இல்லை.
ஓபிஎஸ், வைத்திலிங்கம் போன்றவர்கள் இயக்கத்திற்கு செய்த துரோகம் என்பது மிகப்பெரிய துரோகம், ஓபிஎஸ் எப்படியாவது இந்த இயக்கத்திற்கு ஒற்றைத் தலைமை வரக்கூடாது என்று எண்ணினார். அதையெல்லாம் மீறி தொண்டர்கள் பலத்தால் ஈபிஎஸ் வந்தார். பொதுச் செயலாளராக வருவதற்கு எவ்வளவோ இடையூறு செய்தார்கள். நீதிமன்றங்களை நாடினார்கள் அவை அத்தனையிலும் வெற்றி பெற்ற தலைவராக ஈபிஎஸ் உள்ளார். மதுரையில் கூடிய எழுச்சி மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. அதை தாங்கிக் கொள்ள முடியாமல் டிடிவி தினகரன் பேசுகிறார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “காவிரி தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகிக் கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசு காவிரி விவகாரத்தில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொன்விழா எழுச்சி மாநாடு, உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றின் மூலம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஈபிஎஸ் தலைமையில் 40 தொகுதிகளிலும் வெல்லும் என்பதற்கு அச்சாரமாக உள்ளது” என்றார். முன்னதாக ரயிலடி பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் சரவணன், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ராஜமாணிக்கம், கவுன்சிலர் கேசவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:"காலை உணவு திட்டத்திற்கு பிறகு மாணவ மாணவிகளின் வருகை அதிகரித்துள்ளது" - அமைச்சர் துரைமுருகன்