தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பேரழிவில் இருந்து பாதுகாக்க புதிய முயற்சி - கடலோர பகுதிகளில் அலையாத்தி காடுகள் உருவாக்க திட்டம்" - வன அலுவலர் அகில்தம்பி பேட்டி!

Mangrove afforestation project : தஞ்சாவூர் மாவட்டத்தில் புயல், சுனாமி போன்ற பேரழிவுகளில் இருந்து பாதுகாக்க அலையாத்தி காடுகள் கடலோர பகுதிகளில் அமைக்கப்படும் என மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி தெரிவித்தார்.

Mangrove afforestation project
"பேரழிவில் இருந்து பாதுகாக்க புதிய முயற்சி" - வன அலுவலர் அகில்தம்பி கொடுத்த அப்டேட் என்ன தெரியுமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2023, 1:59 PM IST

பேரழிவுகளில் இருந்து பாதுகாக்க அலையாத்தி காடுகள் அமைப்பு

தஞ்சாவூர்: சென்னையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதன்முறையாக மாவட்ட வன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அதில் கலந்து கொண்ட தஞ்சை மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி, தஞ்சை மாவட்டத்தில் வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து, ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது, "தமிழ்நாட்டில் வனப்பரப்பு 23 சதவீதம் உள்ளது. இதனை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தஞ்சை மாவட்டத்தின் வனப்பரப்பு மற்ற மாவட்டங்களை விட மிகவும் குறைவு. எனவே வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில், இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது உள்ள மொத்த பரப்பளவில் 10 சதவீதம் மட்டுமே வனப்பரப்பு உள்ளது. அதாவது 1000 எக்டேர் அளவுக்கு வனப்பரப்பு உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் விவசாயம் சார்ந்த பகுதி. இங்கு மக்கள் தொகையும் அதிகம். மேலும், தஞ்சையில் நெல் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில் மரங்கள் நடலாம் என தேர்வு செய்து வருகிறோம்.

எப்படியும் அடுத்த 10 ஆண்டுகளில், இன்னும் 5 முதல் 7 சதவீதம் வரை வனப்பரப்பு அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். மேலும் ஏரி, குளங்கள், நீர் நிலைகள் அதிகமாக உள்ளதால் அந்த பகுதிகளில் உள்ள கரைகளிலும் வனப்பரப்பை அதிகரிக்க மரங்கள் நடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்திலும் கடலோர பகுதிகள் உள்ளன. இங்கு கடல் சீற்றம் காரணமாக கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் வகையிலும், சுனாமி, பருவ காலங்களில் ஏற்படும் புயல் போன்ற பேரழிவுகளில் இருந்து தடுக்கும் வகையிலும் அலையாத்தி காடுகள் வளர்க்கப்பட உள்ளது.

இதற்காக எந்ததெந்த பகுதிகளில் அலையாத்தி காடுகள் வளர்க்கலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்து வருகின்றோம். மேலும் பீச் பகுதிகளில் மரங்கள் நட முடியாது. ஆகையால் இதர கடலோரப் பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளை தேர்வு செய்து வருகிறோம்.

தஞ்சை மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் கடல்பசு அதிக அளவில் காணப்படுகிறது. இந்தியாவிலேயே தஞ்சை மாவட்ட கடல் பகுதிகளில் தான் கடல்பசு அதிக அளவில் காணப்படுகிறது. எனவே மனோரா பகுதியில் கடல்பசு பாதுகாப்பு மையம் ரூ.60 கோடியில் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் சிலம்பம் போட்டி: 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு!

ABOUT THE AUTHOR

...view details