தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் பெரிய நாயகிபுரத்தில் வாய்க்கால் கரைகளில் உள்ள அரசுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான மருத மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. ஊரடங்கு நேரத்திலும் மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, தஞ்சாவூர் மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன், மாவட்ட வன அலுவலர் குருசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். பின்னர், மரங்கள் வெட்டியதை தடுக்க தவறியதாக வனத்துறை அலுவர்கள் மீது, துறை ரீதியிலான விசாரணை நடத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் இக்பால் மீது குற்றத்தாள் பிறப்பிக்கப்பட்டு உரிய விளக்கம் கோரப்பட்டுள்ளது. மேலும், வனவர் ராமதாஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டும், வனக்காவலர் கணபதி செல்வம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டும் வனத்துறை அலுவலர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும், கடத்தப்பட்ட மரங்களை மீட்கவும், குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் சிறப்பு குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:அடுத்தடுத்து நான்கு பேரை வெட்டிய ரவுடிகள்!