தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூரில் சயனைடு கலந்த மது விவகாரம்; டாஸ்மாக் பாரில் தடயங்கள் சேகரிப்பு

தஞ்சாவூரில் சயனைடு கலந்த மதுவை குடித்த 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுக்கடை மற்றும் பாரில் தடயவியல் துறையினர் தடயங்களை சேகரித்தனர்.

By

Published : May 23, 2023, 7:21 PM IST

Etv Bharat
Etv Bharat

தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே கீழ அலங்கம் பகுதியில் தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது. அதன் அருகில் தனியார் பாரும் இயங்கி வந்தது. மேலும், டாஸ்மாக் கடை எதிர்புறம் தற்காலிக மீன் மார்கெட் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பாகவே கீழவாசல் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரிகளான குப்புசாமி(68), விவேக்(36) ஆகிய இருவரும் கள்ள சந்தையில் மது வாங்கி அருந்தியுள்ளனர்.

இந்த மதுவை குடித்த இரண்டு பேருக்கும் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் குப்புசாமி மற்றும் விவேக் ஆகிய இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் குப்புசாமி அங்கேயே உயிரிழந்தார். விவேக் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று பின்னர் உயிரிழந்தார்.

இந்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையையும், அதன் அருகில் இருந்த பாரையும் சீல் வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர், 21ஆம் தேதி இரவு மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'உயிரிழந்த இருவரின் உடல்களும் உடற்கூராய்வு செய்யப்பட்டதாகவும், அதில் இரண்டு பேரின் உடல்களிலும் சயனைடு விஷம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், இந்த ஆய்வில் மெத்தில் ஆல்கஹால் இல்லை என்றும் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கள்ள மது குடித்த இருவர் பலி.. மதுவில் சயனைடு விஷம் கண்டுபிடிப்பு... திட்டமிட்ட கொலையா?

பின்னர் பார் உரிமையாளர், ஊழியர் என 2 பேர் மீதும் வழக்கும் மற்றும் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர், விற்பனையாளர் உள்ளிட்ட நான்கு பேர் பணியிடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் உடல்கள் 22ஆம் தேதி அவர்களது உறவினர்களிடம் வழங்கப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிலையில், சயனைடு கலந்த மது குடித்து இருவரும் தற்கொலை செய்தனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என்ற பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் 23ஆம் தேதி அன்று டாஸ்மாக் கடை மற்றும் பாரில் தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா? என ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட தடய அறிவியல் துறை நிபுணர்கள் சென்றனர். அப்போது டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன், கலால் தாசில்தார் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் கடை சீல் அகற்றப்பட்டது. பின்னர் டாஸ்மாக் கடை மற்றும் பாரில் சென்று தடய அறிவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மதுபாட்டில்கள், பாரில் உள்ள பொருட்கள் என அனைத்தையும் ஆய்வு செய்தனர்.

மேலும் சயனைடு ஏதும் உள்ளதா? எனவும் சோதனை செய்தனர். நீண்ட நேரத்திற்கு பின்னர், தடயங்களை சேகரித்து கொண்டு நிபுணர்கள் அலுவலகத்திற்கு சென்றனர். இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:தஞ்சை கள்ள மது விவகாரம்.. 2 பேர் கைது, 4 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்!

ABOUT THE AUTHOR

...view details