தஞ்சாவூர்: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை சாதி, மத பேதமின்றி அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகை. இந்த நிலையில் தை மாதம் முதல்நாள் உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று (ஜன. 15) பொங்கல் பண்டிகை பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் தஞ்சாவூர் அடுத்த நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் வெளிநாட்டினர் கொண்டாடிய கிராமத்து பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் பிரான்ஸ், நெதர்லாந்து, போலந்து, இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தஞ்சாவூருக்கு வருகை தந்த 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் நாஞ்சிக்கோட்டை கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.
முன்னதாக தாரை தப்பட்டை, புலியாட்டம், கொம்பு முழங்க மாட்டு வண்டியில் வெளிநாட்டினர் பாரம்பரிய வேட்டி சேலையில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு நடைபெற்ற கும்மியாட்டம், புலியாட்டம், கோலாட்டம், பானை உடைத்தல், கயிறு இழுத்தல், இளவட்ட கல் தூக்குதல் ஆகிய நிகழ்ச்சிகளை பொது மக்கள் கண்டு களித்தனர்.