தஞ்சாவூர்:தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தை மாதம் முதல்நாள் உழவர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, பிரேசில், அயர்லாந்து சிங்கப்பூர் மலேசியா ஆகிய வெளிநாடுகளிலிருந்து தஞ்சாவூருக்கு வருகை தந்த 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் பொதுமக்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.
முன்னதாக தாரை தப்பட்டை, புலியாட்டம் கொம்பு முழங்க மாட்டு வண்டியில் வெளிநாட்டினர் பாரம்பரிய வேட்டி சேலையில் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற கும்மியாட்டம், புலியாட்டம், கோலாட்டம், பானைஉடைத்தல், கயிறுஇழுத்தல், இளவட்ட கல் தூக்குதல் ஆகிய நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.