பொங்கல் பண்டிகையில் கிராமத்து மக்களுடன் குத்தாட்டம் போட்ட வெளிநாட்டினர் தஞ்சாவூர்:தமிழ்நாடு முழுவதும் தை மாதம் 2ஆம் நாளான நேற்று(ஜன. 17) மாட்டுப் பொங்கல் தமிழர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில், வேங்கராயன் குடிக்காடு கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, ஆண்டு தோறும் பொங்கல் வைத்து, "முதல் மாடு அவிழ்க்கும்" நிகழ்வு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆகையால் மாட்டுப் பொங்கல் தினத்தில் மாடுகளை குளிப்பாட்டி பொங்கல் வைப்பதும், மேலும் அந்த ஊரின் புனித தீர்த்தமான காசாம்பளம் குளத்தில் முதல் மாடு அவிழ்ப்பவர் தனது மாடுகளை குளிப்பாட்டிய பின்னர், கிராமத்தில் உள்ள நபர்கள் தங்களது மாடுகளை ஒரே நேரத்தில் இறக்கி குளிப்பாட்டுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.
தற்போது இந்த பாரம்பரிய நிகழ்வைக் காண்பதற்காக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலின்படி, தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில், பிரான்ஸ், நெதர்லாந்து. போலந்து ஆகிய வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். தங்களது கிராமத்துக்கு வந்த வெளிநாட்டினரை அக்கிராம மக்கள் ஆரத்தி எடுத்து, கதர் ஆடை அணிவித்து, மேளதாளத்துடன் உற்சாகமாக வரவேற்றனர்.
முதலில் குளத்தில் மாடுகளை குளிப்பாட்டும் நிகழ்வுகளை வெளிநாட்டினர் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து, தாரை தப்பட்டையுடன் மாடுகள் ஊரின் நடுவே உள்ள கோயிலுக்கு அழைத்து வரப்பட்டது. அப்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கிராம மக்களோடு, தப்பாட்டம் பறை இசைக்கு உற்சாகத்துடன் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். மேலும் கிராமத்தில் உள்ள வயல்களை பார்வையிட்ட அவர்கள் "இயற்கை எழில் கொஞ்சும் அழகான ஊர், அன்பான மக்கள்" என புகழாரம் சூட்டினர்.
அதைத் தொடர்ந்து ஊரில் உள்ள தெருக்களை பார்வையிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இன்று (ஜன. 17) ஜல்லிக்கட்டில் முதல்மாடு அவிழ்க்கும் ஜெயபால் வீட்டுக்கு சென்று, அங்கு மாட்டுக்கு பொங்கல் வைத்து, மாடுகளுக்கு ஊட்டி மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் மற்றும் கிராம மக்கள் இணைந்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Madurai Alanganallur Jallikattu : உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! என்னென்ன சிறப்புகள் இருக்கு?