தஞ்சாவூர்:தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறையின் சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் வகையில், மினி டைட்டல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் மேலவஸ்தா சாவடி அருகே 3.40 ஏக்கர் பரப்பளவில் 55 ஆயிரம் சதுர அடியில் ரூ.27 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில், 4 அடுக்கு மாடி கட்டிடமாக மினி டைட்டல் பார்க் உருவாக்கிட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை இன்று (நவ. 25) தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்து, கட்டிட பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "தஞ்சையில் டைட்டல் பார்க் கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
பணிகள் முடிந்தவுடன் மிகப்பெரிய நிறுவனங்கள் வரவிருக்கின்றன. குறிப்பாக டெல்டா பகுதி இளைஞர்களுக்கும், படித்து புதிய தொழில் முனைவோராக உருவாகும் இளைஞர்களுக்கும், இங்கேயே புதிய தொழில்களை துவங்கும் startup Hub ஆக திகழ இருக்கிறது. அதன் மூலம் தொழில் முனைவோருக்கும், இளைஞர்களுக்கும் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தையோ, சுற்றுச் சூழலையோ பாதிக்கக்கூடிய தொழிற்பேட்டைகள் எதுவும், எந்த காலத்திலும் வராது. விவசாயம் சார்ந்த, சுற்றுச்சூழல் பாதிக்காத தொழிற்பேட்டைகள் மட்டுமே நிச்சயமாக கொண்டு வருவோம். டெக்ஸ்டைல் பார்க் இங்கு கொண்டு வந்தால், டையிங் இங்கு கொண்டு வர முடியாது.