தஞ்சாவூர்சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 37ஆவது பட்டமளிப்பு விழா இன்று (செப் 9) நடைபெற்றது. இதில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுத் தலைவர் சீத்தாராம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
முன்னதாக பேசிய அவர், “தேசியக் கல்விக் கொள்கை மூலம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். ஆய்வு மற்றும் புத்தாக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக தேசியக் கல்விக் கொள்கை உள்ளது. இதன் மூலம் நம் நாடும் வளர்ச்சி அடைந்து வருகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பம், கைப்பேசி தொழில்நுட்பத்தில் சாட் ஜிபிடியால் (Chat GPT) பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
மனித ஆற்றலுக்குப் பதிலாக சாட் ஜிபிடி பயன்படுத்தப்படுவதால், ஏராளமான வேலைவாய்ப்புகள் மறைந்துவிடும். அதே சமயம், புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும். உலக முழுவதுக்கும் அதிக அளவில் பட்டதாரிகளை அனுப்பி வைக்கும் நாடாக இந்தியா உருவாகி வருகிறது. அதாவது, இருபது லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். இவர்களில் 40 விழுக்காடு பேர் பெண்களாக உள்ளனர்.
சந்திரயான்-3 திட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று பணியாற்றினர். உலகத்திற்கு தலைமை ஏற்கும் விதமாக இந்தியாவின் லட்சியப் பயணம் உள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு லட்சிய செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், மாணவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். நாடு முழுவதும் பல்வேறு பொறியியல் கல்வி நிறுவனங்களில் 110 செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன.