தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூ.6,500 கோடி அளவில் வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பெருமிதம்! - tanjore news

அரசு மீன் குஞ்சு உற்பத்தி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பினை ஆய்வு மேற்கொண்ட மீன்வளத்துறை அமைச்சர், தமிழகத்தில் 6,500 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவித்தார்.

6,500 கோடி ரூபாய் அளவில் வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி - மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
6,500 கோடி ரூபாய் அளவில் வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி - மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

By

Published : May 30, 2023, 4:24 PM IST

Updated : May 30, 2023, 5:21 PM IST

6,500 கோடி ரூபாய் அளவில் வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி - மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

தஞ்சாவூர்:கரந்தையில் அரசு மீன் குஞ்சு உற்பத்தி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் மீன் குஞ்சுகள் பராமரிப்பினை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆகியோர் இன்று (மே 30) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது, “தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகள் குளங்களில் மீன் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு சத்தான உணவை பெற வேண்டும் என்ற வகையில் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் மீன் குஞ்சு உற்பத்தி செய்தாலும் இன்னும் ஆந்திரா மற்றும் மற்ற இடங்களிலிருந்து மீன் குஞ்சு வாங்க கூடிய சூழ்நிலையும் இருந்து வருகிறது. அந்த நிலைகளை மாற்றி மொத்தமாக தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனை பண்ணைகளிலும் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் பகுதி, தஞ்சை மற்றும் தாமிரபரணி ஆகிய பகுதிகளில் மீன் குஞ்சு பொறிப்பகங்கள் அதிகமாக இருக்கிறது. கடந்த காலங்களில் வெளி மாநிலங்களிலிருந்து அதிகமான மீன் குஞ்சுகளை வாங்கி விவசாயிகளுக்கு கொடுக்கக் கூடிய சூழ்நிலை இருந்தது. ஆனால் இன்றைக்கு ஏறக்குறைய 75 சதவீதம் தமிழகத்திலேயே மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு கொடுத்து, சத்தான உணவை மக்கள் பெறுகின்ற வகையில் நடைமுறைகளை செய்து வருகிறோம்” என தெரிவித்தார்.

மேலும், “கடல் மீன்களும் சேர்த்து 6,500 கோடி ரூபாய் அளவிற்கு வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீன்பிடி தடை காலத்தில் மீனவர் குடும்பத்திற்கு தலா 5,000 ரூபாய் தரக்கூடிய திட்டத்தை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். மீனவர்கள் அதை அதிகரித்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அதை முதல்வர் கனிவுடன் பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுப்பார்.

மல்லிபட்டிணத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார். பின்னர் முதல்வர் வெளிநாடு சென்றுள்ள நேரத்தில் தமிழகத்தில் ஐ.டி ரெய்டு நடப்பது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, ஐ.டி ரெய்டு என்றால் என்ன? என எதிர் கேள்வி கேட்டு நழுவிச் சென்றார்.

தமிழகத்தில் ரசாயன பொருட்களை வைத்து மீன்களை பதப்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் பல்வேறு மீன் விற்பனை மையங்களில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படும் செய்தி பரவலாக உள்ளது. குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் (மே 28) 15 கிலோ எடையுள்ள ரசாயனம் கலந்த மற்றும் கொட்டுப்போன மீன்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு குழி தோண்டி புதைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த ஆய்வின் போது எம்.எல்.ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தஞ்சை மாவட்டத்தில் ஈச்சங்கோட்டை கால்நடை பெருக்க பண்ணை, மல்லிபட்டிணம், சேதுபாவாசத்திரம் மற்றும் கீழத் தோட்டம் மீன்பிடி இறங்குதளம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதையும் படிங்க:மீன் பிரியர்கள் அதிர்ச்சி; குழி தோண்டி புதைக்கப்பட்ட மீன்கள்..சோதனையில் தெரியவந்த உண்மை!

Last Updated : May 30, 2023, 5:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details