கரோனா தொற்று தமிழ்நாட்டிற்கு வந்த நாள் முதல் இதுவரை தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதி கரோனா தொற்று பாதிக்காத பகுதியாக இருந்து வந்தது. இதனையடுத்து தற்போது பேராவூரணி, முடச்சிக்காடு - சமத்துவம் பகுதியிலுள்ள பெண்மணி ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் இந்த பெண்மணியின் கணவர் டெம்போவில் பழங்களை கொண்டுபோய், ஒவ்வொரு ஊராக விற்று வரும் தொழில் செய்து வருகிறார்.
கரோனா தொற்று இல்லாத பகுதியில் முதல் கரோனா தொற்று உறுதி இந்நிலையில் இந்தப் பெண்மணிக்கு நோய்த்தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் தென்படவே இவரை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அப்பெண்மணிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து முடச்சிக்காடு பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு தடுப்பு வேலிகள் அமைத்து, வருவாய்த் துறையினர் காவல் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுகாதாரத்துறையினர் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களையும் கண்காணித்து வருகின்றனர். மேலும் இந்தப் பெண்மணியின் குடும்பத்தார்களையும் சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்து வருகின்றனர்.