தஞ்சாவூர்:தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் புதிதாக தனியார் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தடையில்லா சான்று பெறுவதற்காக, அதன் அலுவலர்கள் தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள மாவட்ட தீயணைப்பு நிலையத்தை தொடர்பு கொண்டு உள்ளனர்.
இதன் பேரில், உதவி தீயணைப்பு அலுவலர் முனியாண்டியை (56) அவர்கள் சந்தித்துள்ளனர். அப்போது அவர்களிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் தருமாறு உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கூறியுள்ளார். இதனையடுத்து, அவ்வளவு தொகை தன்னால் கொடுக்க முடியாது எனக் கூறிய மருத்துவமனை அலுவலர்களிடம், ஆயிரம் ரூபாய் குறைத்துக் கொண்டு ரூ.14 ஆயிரம் தருமாறு உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் முனியாண்டி கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத மருத்துவமனை அலுவலர்கள், தஞ்சாவூர் ஊழல் தடுப்பு காவல் பிரிவினரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஊழல் தடுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் ஆய்வாளர்கள் பத்மாவதி, அருள் மோகன் உள்ளிட்டோர் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அலுவலகத்தில் நேற்று ( அக் 12) மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது தனியார் மருத்துவமனை அலுவலர்களிடம் ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மாவட்டத் தீயணைப்பு அலுவலர் முனியாண்டியை, ஊழல் தடுப்பு காவல் பிரிவினர் கையும் களவுமாக பிடித்து, கைது செய்து விசாரணை நடத்தினர். இதனால் தீயணைப்பு துறை அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
இதையும் படிங்க:காதல் விவகாரத்தில் மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை கைது!