பட்டா மாறுதலுக்கு ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் : கிராம அலுவலர் அதிரடி கைது தஞ்சாவூர்: தஞ்சை ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன், தொழிலதிபரான இவர் தனியார் கல்லூரி, மருத்துவமனை மற்றும் இருசக்கர வாகன விற்பனையகம் ஆகியவற்றை நடத்தி வருகிறார், இவருக்கு தஞ்சையை அடுத்த குருவாடிப்பட்டியில் சொந்தமாக 4.5 ஏக்கர் நிலம் உள்ளது, 3 சர்வே எண்கள் கொண்ட இந்த நிலத்தில் தனது பெயருடன் உள்ள மற்றொரு பெயரை நீக்கி விட்டு தனது பெயரில் மட்டும் பட்டாவை மாற்றம் செய்ய வேண்டுமென இளங்கோவன் கடந்த 3ஆம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தார்.
இந்த நிலையில் இந்த விண்ணப்பம் தொடர்பாக குருவாடிபட்டி கிராம நிர்வாக அலுவலர் வீரலட்சுமி (வயது 31) என்பவர் விசாரணை நடத்தினார், இதனால் இளங்கோவனுக்கு சொந்தமான நிறுவனத்தின் மேலாளர் அந்தோணி யாகப்பா என்பவர் கிராம நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்து பட்டா மாறுதல் தொடர்பாக பேசினார்.
அப்போது மூன்று பட்டாவையும் பெயர் மாற்றம் செய்வதற்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் ரூபாய் 30 ஆயிரம் கொடுக்க வேண்டும் என அந்தோணி யாகப்பாவிடம் கிராம நிர்வாக அலுவலர் கூறியுள்ளார், இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர் தனது நிறுவனத்தின் உரிமையாளரிடம் கூறிவிட்டு மீண்டும் தொடர்பு கொள்வதாக தெரிவித்து விட்டு வந்துள்ளார்.
பின்னர் விஏஓ வீரலட்சுமி ரூ 5 ஆயிரம் குறைத்துக் கொண்டு 25 ஆயிரம் கொடுக்குமாறு கேட்டுள்ளார், அதன் பின்னர் முதல் கட்டமாக ரூ 10 ஆயிரம் கொடுப்பதாக அந்தோணி யாகப்பா தெரிவித்துள்ளார், இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 10) காலை தஞ்சை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் அந்தோணி யாகப்பா புகார் அளித்தார்.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் 10 ஆயிரத்தை அந்தோணி யாகப்பாவிடம் கொடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர், அதன்படி கிராம நிர்வாக அலுவலரை செல்போனில் தொடர்பு கொண்ட அந்தோணி யாகப்பா தஞ்சை தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள இ சேவை மையத்தில் கிராம நிர்வாக அலுவலர் வீரலட்சுமியிடம் ரூபாய் 10 ஆயிரத்தை நேற்று மாலை கொடுத்தார்.
அந்த பணத்தை வாங்கிய விஏஓ தனது பையில் வைத்த போது அங்கே மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன் அருண் பிரசாத் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் வீரலட்சுமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர், பின்னர் வீரலட்சுமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர், இதனால் தஞ்சை தாசில்தார் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டு சக விஏஓக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க :கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி பைக் மீது மோதிய விபத்தில் 6 பேர் பலி!