புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் கனகராஜன் (57). இவரது மனைவி மீனா (45), மகன் மனோஜ்குமார் (26). கனகராஜன் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கண்காணிப்பாளராக(சூப்பர்வைசர்) வேலை பார்த்து வந்தார்.
கிருஷ்ணகிரியில் வாடகை வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கனகராஜன் மனைவி மீனாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சைப் பலனின்றி மீனா உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அங்கேயே கரோனா விதிமுறைப்படி மீனாவுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. பின்னர் மீனாவின் அஸ்தியை, தனது மாமனார் வீடான தஞ்சை மாவட்டம், திருவோணம் அருகே உள்ள நரங்கிப்பட்டு கிராமத்தில் கரைக்க கனகராஜன் முடிவு செய்தார்.
அதன்படி, தனது மகன் மனோஜ்குமாருடன் சில நாட்களுக்கு முன் நரங்கிப்பட்டை சென்றார். கடந்த 18ஆம் தேதி மீனாவின் அஸ்தி அங்கு கரைக்கப்பட்டது. இதற்கிடையே மீனாவின் மறைவால், கடந்த ஒரு மாதமாகவே கனகராஜன் மிகுந்த மனவேதனையில் காணப்பட்டு வந்தார். யாருடனும் சரிவர பேசாமல் விரக்தியிலேயே இருந்துள்ளார்.