தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயத்தை மட்டுமே முழுமையாக நம்பி உள்ள கிராமம் தென்னங்குடி கிராமம். அந்த கிராமத்தில் அமைந்துள்ள பெரிய ஏரியானது தென்னங்குடி, களத்தூர், கள்ளுராணிக்காடு, கலகம் உள்ளிட்ட கிராமங்களுக்கு முக்கிய நீராதாரமாகயிருந்துவருகிறது. பருவமழைக் காலங்களில் கல்லணையிலிருந்து தண்ணீர் இந்த ஏரிக்கு திறந்துவிடப்படுவது வழக்கம்.
ஆனால் கல்லணையிலிருந்து ஏரிக்கு நீர் வரும் வாய்க்கால்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர், மண் அடைத்து தண்ணீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பலமுறை விவசாயிகள், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் இதுகுறித்து தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அதனால் அக்கிராம இளைஞர்கள் விவேகானந்தா இளைஞர் சங்கம் எனும் அமைப்பை உருவாக்கி பெரிய ஏரியில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தனர். அதையடுத்து அவர்கள் பேராவூரணி கைஃபா என்ற தன்னார்வ அமைப்பினரிடம் தண்ணீர் கொண்டுவருவது குறித்து கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்ற கைஃபா அமைப்பினர் சொந்த செலவில் கல்லணை வாய்க்காலிலிருந்து பெரிய ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வாய்க்கால்களை பலர் ஆக்கிரமித்துள்ளதால் தூர்வாருவதில் சிக்கல் ஏற்பட்டது. அதுகுறித்து அலுவலர்களிடம் முறையிட்டு வழக்கு போட்டால் பருவமழை முடிந்துவிடும் என விவசாயிகள் வருத்தம் தெரிவித்தனர்.
விவசாயத்தை காக்க நிலம் வழங்கிய விவசாயிகள் இந்த நிலையில் தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த 8 விவசாயிகள் தாமாக முன்வந்து அவர்களுடைய சொந்த நிலத்தில் வாய்க்கால்கள் வெட்ட அனுமதி அளித்தனர். அதனைப் பயன்படுத்திக்கொண்ட கைஃபா அமைப்பினர் விவசாயிகளின் நிலத்தில் வாய்க்கால்கள் வெட்டும்பணியில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். சில வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
தனது கிரமாத்திற்கு மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள கிராம விவசாயிகளும் பயன்பெறவேண்டும் என நல்லெண்ணத்துடன் 600 மீட்டர் வரை நிலத்தில் வாய்க்கால்கள் வெட்ட அனுமதியளித்த அந்த 8 விவசாயிகளும் அப்பகுதியில் மிகுந்த பாராட்டுக்குரியவர்களாக மாறியுள்ளனர். கொடுத்தவர்கள் சாதாரண சிறு விவசாயிகள்.
இதையும் படிங்க:70 ஏக்கர் ஆக்கிரமிப்பு: திருநாவலூர் ஏரியின் குடிமராமத்துப் பணியை தடுத்துநிறுத்திய விவசாயிகள்!