தஞ்சாவூர்: கும்பகோணம் கொட்டையூரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தொடர்ந்து 4வது வாரமாக நேற்று (ஜூலை 5) பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்டு, தாங்கள் விளைவித்த சுமார் 3,700 குவிண்டால் பருத்தியினை சுமார் 2,440 லாட்டாக விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதனை ஆய்வு செய்து விலை நிர்ணயம் செய்த தமிழகத்தின் பல்வேறு ஊர்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து வந்த 16க்கும் மேற்பட்ட வணிகர்கள் விலையை நிர்ணயம் செய்து பட்டியல் அளித்தனர். அதில் ஒவ்வொரு லாட்டிற்கும் அதிகபட்ச விலை நிர்ணயித்த வணிகரின் விலை அந்த லாட்டிற்கான, விலையாக முடிவு செய்து பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன்படி பருத்தி விலை குறைந்தபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 5,909 ஆகவும், அதிகபட்சமாக ரூபாய் 6,642 ஆகவும், சராசரி விலையாக ரூபாய் 6,250 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து ஏலத்திற்கு வந்த பருத்திகளுக்கு ரூபாய் 2 கோடியே 31 லட்சம் விலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் வாரத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூபாய் 7 ஆயிரம் கிடைத்தது. ஆனால் அடுத்த வாரங்களில் அந்த விலை கிடைக்காத போதும், நேற்றைய விலை என்பது கடந்த வாரத்தை விட குவிண்டாலுக்கு ரூபாய் 350 அதிகமாகும். ஆனால், கடந்த ஆண்டு பருத்தி குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ரூபாய் 7,500 ஆகவும், அதிகபட்ச விலையாக ரூபாய் 12,179ஆகவும் இருந்தது. எனவே கடந்தாண்டை ஒப்பிடும்போது, நடப்பாண்டில் பருத்தி விலை பாதிக்குப் பாதியாக குறைந்துள்ளதால் பருத்தி விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர்.