தஞ்சாவூர்:கும்பகோணம் அருகேயுள்ள திருவாரூர் புறவழிச்சாலை அருகே அமைந்துள்ள சிவபுரம் கிராமத்தில் அரசலாற்றில் இருந்து கீர்த்திமன்னாறு பிரிகிறது. அதற்காக இங்கு நீரொழுங்கி ஒன்று அமைந்துள்ளது. பொதுப்பணித்துறை சார்பில், ரூ.136 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில், சுமார் 13 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீர்பாசன உள்கட்டமைப்புகளை நீட்டிக்கவும், புனரமைக்கவும், நவீனப்படுத்தவும் ஈரோடு பெருந்துறையை சேர்ந்த அன்னை இன்ப்ரா டெவலப்பர்ஸ் லிட் (Annai Infra Developers Pvt Ltd) என்ற தனியார் ஒப்பந்ததாரர் மூலம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த பணி தொடங்கப்பட்டது.
இதில் நீரொழுங்கிக்கு அருகே இருபுறமும் நீர் தேங்குவதால், கரைகளில் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் சுமார் 3 மீட்டர் உயரத்திற்கு, பெரிய பெரிய சிமெண்ட் கற்களை கொண்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. அதை அமைத்து சில மாதங்களுக்கு பிறகு, இந்த தடுப்பு சுவற்றில் இருந்து பொக்லைன் இயந்திர உதவியோடு, தரையில் இருந்து சுமார் ஒன்றரை மீட்டர் உயர கற்களை மட்டும் விட்டு விட்டு எஞ்சிய ஒன்றரை மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ள கற்களை பெயர்த்து எடுத்து கரையை மண் கொண்டு சமன் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இப்பகுதி பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எதற்காக 3 மீட்டர் உயர தடுப்பு சுவர் அமைக்கப்பட்டது. தற்போது சில மாத இடைவெளிக்கு பிறகு எதனால் அதில் பாதியளவு சுவர் அதிரடியாக அகற்றப்பட்டு வருகிறது என்பது தெரியாததால் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
ஆனால் இது குறித்து பேசும் இப்பகுதி விவசாயிகள், "நீரொழுங்கி மூடினால், தேக்கப்படும் நீராலும், பெருமழை, வெள்ள காலங்களிலும், உயரம் குறைக்கப்பட்ட தடுப்பு சுவரால், கரைகளில் அரிப்பு ஏற்பட்டு ஊருக்குள் வெள்ளம் புகும் அபாயமும் உள்ளதாக" அச்சப்படுகின்றனர்.