தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவகாரம்.. விவசாயிகள் போராட்டம்.. முதலமைச்சரிடம் கோரிக்கை! - தஞ்சாவூர் லேட்டஸ்ட் செய்திகள்

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவகாரத்தில் விவசாயிகள் மீதான அனைத்து கடன்களையும் அரசு தள்ளுபடி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் நாகை மாலி, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

Secretariat
Secretariat

By

Published : May 8, 2023, 5:06 PM IST

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவகாரம்.. விவசாயிகள் போராட்டம்.. முதலமைச்சரிடம் கோரிக்கை!

தஞ்சாவூர் : கும்பகோணம் அடுத்த திருமண்டங்குடி சர்க்கரை ஆலையில், கரும்பு விவசாயிகளுக்கு தெரியாமலேயே அவர்களின் பெயரில் 130 கோடி ரூபாய் மோசடி நடந்து உள்ளது என்றும், இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி(வி.பி.மகாலிங்கம்), மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்த திருமண்டங்குடியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், அப்பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் கரும்பு வழங்கியதற்கான தொகையை திருப்பித் தரவில்லை எனக் கூறி விவசாயிகள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திரு ஆரூரான் சர்க்கரை ஆலை 2015ஆம் ஆண்டு முதல் 2018 வரை விவசாயிகளுக்குத் தெரியாமல் விவசாயிகள் பெயரில் வங்கிகளில் சுமார் ரூபாய் 300 கோடி கடன் பெற்று, மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடன் தொகை திருப்பிச் செலுத்தாததால் 13 ஆயிரம் விவசாயிகளை வங்கிகள் கருப்பு பட்டியலில் இணைத்து உள்ளது.

இதனால், விவசாயிகள் எந்த வங்கியிலும் கடன் பெற முடியாமல் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். இந்த திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை விவகாரம் தொடர்பாக, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கூட்டத்தில் எந்த முடிவு எதுவும் எட்டப்படாததால், விவசாயிகளின் போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கரும்பு விவசாயிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி, பாபநாசம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகளின் சங்க தலைவர் ரவீந்திரன் ஆகியோர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். பின்னர் அனைவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி(வி.பி.மகாலிங்கம்) கூறியதாவது, "விவசாயிகளுக்குத் தெரியாமலேயே விவசாயிகளின் பெயரில் சர்க்கரை ஆலை நிர்வாகம் 130 கோடி கடன் பெற்று மோசடி செய்தது உள்ளது. இதை அறிந்த விவசாயிகள் 160 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விவசாயிகள் வங்கியில் பெற்ற 40 கோடி ரூபாய் பணத்தையும் அந்த நிறுவனம் வங்கியில் கட்டாத காரணத்தால், அந்த வங்கிக் கடனையும் திருப்பிச் செலுத்துமாறு விவசாயிகளிடம் வங்கிகள் கேட்கின்றன.

பட்ஜெட் கூட்டத் தொடரின்போது இந்த பிரச்னை குறித்து நாங்கள் சட்டமன்றத்தில் எழுப்பினோம். அப்போது இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டது. நாங்கள் முதலமைச்சரை சந்தித்து இது குறித்து வலியுறுத்தி உள்ளோம். விவசாயிகளின் பெயரில் வாங்கப்பட்டுள்ள, 130 கோடி ரூபாய் கடன் தொகையை அரசு ரத்து செய்ய வேண்டும்.

நீண்ட நாட்களாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை விவசாயிகளுக்குத் தெரியாமல் மொத்தம் 17 வங்கிகளில் அவர்கள் பெயரில் கடன் வாங்கப்பட்டுள்ளது. கரும்பு கட்டிங் ஆர்டரில் கையெழுத்து போடு எனக் கூறி, விவசாயிகளை அந்த சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடி செய்துள்ளது" என்றார்.

தொடர்ந்து கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ரவீந்திரன் கூறியதாவது, "கும்பகோணம் அருகே உள்ள திருமணங்குடி சர்க்கரை ஆலை, நஷ்டம் அடைந்துள்ள நிலையில் ஸ்கால்ஸ் என்ற நிறுவனம் அந்த ஆலையை வாங்கி உள்ளது. இந்நிலையில் தான் ஆலைக்கு கரும்பு வழங்கி வந்த விவசாயிகளின் பெயரில், அந்த சர்க்கரை ஆலை வங்கிகளில் கடன் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரண்டு ஆரூரான் சக்கரை ஆலையும் 157.51 கோடி ரூபாய் பணபாக்கியை விவசாயிகளுக்குத் தர வேண்டும். விவசாயிகளின் பெயரில் கரும்புப் பயிர்க் கடன் வாங்கப்பட்டுள்ள 40 கோடி ரூபாய் கடன் ரத்து செய்யப்பட வேண்டும்.

விவசாயிகள் பெயரில் இருக்கக்கூடிய அனைத்துக் கடன்களை ஆலைகள் பெயரில் மாற்றி தள்ளுபடி செய்து, கடன் வலைகளில் இருந்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கையை விடுத்தோம்" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க :நேதாஜி சுபாஷ் சேனைப்படைத் தலைவர் கைது; 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details