தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம் சுவாமிமலையை அடுத்துள்ள திருமண்டங்குடியில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை, மற்றொரு தனியார் நிறுவனம் ரூ.145 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
இதில் அரவை கரும்பிற்கு, விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை சுமார் நூறு கோடி ரூபாய் மற்றும் விவசாயிகளின் பெயரில் பல்வேறு வங்கிகளில் முந்தைய சர்க்கரை ஆலை நிர்வாகம் பெற்ற கடன் சுமார் 300 கோடி ரூபாய் ஆகியவற்றை உடனடியாக வழங்கக் கோரி, நேற்று (நவ.30) முதல் ஆலை முன்பு காத்திருப்பு போராட்டத்தை நூற்றுக்கணக்கான விவசாயிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் விவசாயிகள் பெயரில் வங்கிகளில் பெற்றுள்ள கடன் தொகையை முழுமையாக விவசாயிகளுக்கு திருப்பி தர வேண்டும்; திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, மூடப்பட்ட சர்க்கரை ஆலையை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்தும், கரும்பு விவசாயிகள் தங்களது குடும்பத்தினருடன் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவருமே அங்கேயே சமையல் செய்து உண்டு உறங்கி, டெல்லி பாணியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மேலும் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெறும் இப்போராட்டத்தில், விவசாயிகள் எலிக்கறி தின்றும், அரை நிர்வாணமாகவும் ஈடுபட்டு வருகின்றனர்.