தஞ்சாவூர்: கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில், இன்று காலை முதல் விட்டு விட்டு லேசான நல்ல மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கும்பகோணம் அருகேயுள்ள அசூர், கடிச்சம்பாடி, தேவனஞ்சேரி, கல்லூர், அகராத்தூர், வாழ்க்கை, திருநல்லூர், பறட்டை உள்ளிட்ட பல கிராமப்பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சம்பா நெல் பயிர்கள் மழையில் நனைந்தும், பழு தாங்காமல், வயலிலேயே மழைநீரில் சாய்ந்து சேதமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சேமித்து வைப்பதற்கு போதிய இடவசதி மற்றும் கொட்டகை வசதி இல்லாததாலும் கொள்முதல் நிலையத்தில் நெல்களை மூடி வைப்பதற்கு போதிய அளவிலான தார்பாய்களும் இல்லாததால் விவசாயிகள் நெல் மணிகளை மழையில் இருந்து காப்பாற்ற முடியாமல் கடும் சிரமத்திற்கு உட்பட்டுள்ளனர்.