தஞ்சாவூர்:தஞ்சையை அடுத்த காசவளநாடு தெக்கூர் பாலம் பகுதியில் கல்லணை கால்வாய் ஆற்றில் நேற்று (நவ.26) ஒரு பெண், சிறுமி ஆகியோரது சடலம் மிதந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கல்லணை கால்வாயில் இறங்கி தண்ணீரில் மிதந்த சடலங்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இவர்கள் இரண்டு பேரின் உடல்களும் சுடிதார் துப்பட்டாவால் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது. இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து இரண்டு பேரின் உடல்களை போலீசார் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கல்லணை கால்வாயில் சடலமாக கிடந்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில் கல்லணை சடலமாக கிடந்தவர்கள், தஞ்சை விளார் சாலை தில்லைநகர் சேர்ந்த செந்தில்குமாரின் மனைவி பத்மஜோதி (வயது 38) மற்றும் அவரது இளைய மகள் தீபிகா (15) என தெரியவந்தது. குடும்பப் பிரச்சினை காரணமாக செந்தில்குமாரை விட்டு பிரிந்து சென்ற பத்மஜோதி தனது இளைய மகளுடன் தஞ்சையிலும், செந்தில்குமார் அவரது மூத்த மகளுடன் திருவாரூரிலும் வசித்து வந்துள்ளனர்.