தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள இடையாத்தி மந்திக்கோன் விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவர் சென்னையில் தொழில் செய்து வருகிறார். மந்திகோன் விடுதியிலுள்ள வீட்டில் அவரது தாய் செல்லம்மாள் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர், அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் முத்துவேல் என்பவர் பாரதிராஜாவுக்கு 5 சென்ட் இடத்தை விற்பனை செய்துள்ளார். விற்பனை செய்த இடத்தில் பாதை உள்ளதாகக் கூறி, அந்த இடத்தை தனக்கு தர வேண்டும் எனக்கூறி, பாரதிராஜாவின் தாயிடம் முத்துவேல் கேட்டுள்ளார்.
அதற்கு பாரதிராஜாவின் தாய், விற்பனை செய்த 5 சென்ட் நிலம் தான் உள்ளது. இதில் எப்படி உங்கள் இடம் இருக்கும் என்று கூறி இடத்தைத் தர மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த முத்துவேல், பாரதிராஜாவின் தாயை அடித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, வாட்டாத்திக் கோட்டை காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் முத்துவேல் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.
இதையடுத்து பாரதிராஜா சென்னையிலிருந்து குடும்பத்துடன் மந்திக்கோன்விடுதிக்கு வந்து தாயாரை பார்த்து செல்ல வந்துள்ளார். அப்போது தனது தாயாரை தாக்கியது அறிந்து பாரதிராஜா, முத்துவேல் வீட்டுக்குச் சென்று நிலம் தொடர்பாக கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
எனக்கு எழுதிக்கொடுத்த ஐந்து சென்டில் தான் நான் வீடு கட்டியுள்ளேன். மேலும் அதற்கான முழுத் தொகையையும் உங்களுக்கு செலுத்திவிட்டேன்.
அந்த இடத்திற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் உள்ளன. அப்படியிருக்க உங்களுடைய இடம் இங்கு எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளார். இதில் ஆவேசமடைந்த முத்துவேல் பாரதிராஜாவைத் தாக்கியதோடு, அவரின் மனைவியின் கழுத்தில் இருந்த தாலி செயினை அறுத்து, பாதி செயினை எடுத்து சென்று விட்டதாகக்கூறப்படுகிறது.