தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் முடிவுகள்: டெல்டா மண்டலத்தின் கடந்த கால வரலாறு

தமிழ்நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து வருடங்களுக்கு எழுதப்போவது யார் என்பதற்கான விடை இன்று தெரிந்துவிடும். இதற்கு முன் இரண்டு கழகங்களும், மற்ற கட்சிகளும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் எத்தனை முறை வென்றிருக்கின்றன?

dsa
dsa

By

Published : May 2, 2021, 7:49 AM IST

சோறுடைத்த சோழநாடு, காவிரி தாயின் அரவணைப்பு அதிகளவு இருக்கும் பகுதி போன்ற சிறப்புகளை பெற்றது டெல்டா மண்டலம்.

இந்த மண்டலம் திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய எட்டு மாவட்டங்களை உள்ளடக்கியது. மொத்தமாக இம்மண்டலத்தில் 37 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன.

டெல்டா மண்டலத்தை பொறுத்தவரை திமுகவின் கையே அதிகம் ஓங்கியிருக்கிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம்:

காவிரி நதிக்கரையில் அமைந்திருக்கும் திருச்சி மாவட்டமானது, மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் (தனி) என ஒன்பது சட்டபேரவைத் தொகுதிகளை கொண்டுள்ளது.

இதில் மணப்பாறை, திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மண்ணச்சநல்லூர், துறையூர் தொகுதிகள் 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டவை.

மணப்பாறை, திருச்சி கிழக்கு, மண்ணச்சநல்லூர் தொகுதிகள் சந்தித்த 2011, 2016 தேர்தல்களில் அதிமுக இரண்டு முறை வெற்றியடைந்திருக்கிறது.

அதேபோல், திருச்சி மேற்கு மற்றும் துறையூரில் அதிமுகவும், திமுகவும் தலா ஒரு முறை வென்றிருக்கின்றன.

ஸ்ரீரங்கம் மற்றும் முசிறியில் எட்டு முறை அதிமுக வென்றுள்ளது. திமுகவைப் பொறுத்தவரை லால்குடியில் 8 முறையும், திருவெறும்பூரில் 6 முறையும் முசிறியில் நான்கு வென்றிருக்கிறது. திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை இரண்டு கட்சிகளும் சம பலத்துடன் காணப்படுகின்றன.

பெரம்பலூர் மாவட்டம்:

திருச்சி மாவட்டத்தில் இருந்த பெரம்பலூர் மாவட்டம் கடந்த் 1995ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அமைக்கப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாவட்டத்தில் மொத்தம் 5, 65, 223 பேர் இருக்கின்றனர்.

இந்த மாவட்டமானது, பெரம்பலூர் (தனி), குன்னம் என்ற இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டது. 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குன்னம் தொகுதியில், திமுக ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் வென்றிருக்கின்றன.

பெரம்பலூர் தொகுதியைப் பொறுத்தவரை 1967ஆம் ஆண்டு தேர்தலில் இருந்து திமுக, அதிமுக தலா ஐந்து முறையும், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு முறையும் கைப்பற்றியிருக்கின்றன. இந்த மாவட்டத்தை பொறுத்தவரை இரண்டு கட்சிகளும் சமபலத்துடனேயே கடந்த காலங்களில் இருந்திருக்கின்றன.

அரியலூர் மாவட்டம்:

பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அரியலூர் 2007ஆம் ஆண்டு தனி மாவட்டமாக அமைக்கப்பட்டது. அரியலூர், ஜெயங்கொண்டம் என்ற இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன.

அரியலூர் தொகுதியில் அதிமுக 5 முறையும், திமுக 4 முறையும் வென்றிருக்கின்றன. ஜெயங்கொண்டம் தொகுதியில் இரண்டு கட்சிகளும் தலா 4 முறை வென்றிருக்கின்றன. இந்த மாவட்டத்திலும் திமுக, அதிமுக கடந்த காலங்களில் சம பலத்துடனே களத்தில் இருந்திருக்கின்றன.

நாகப்பட்டினம் மாவட்டம்:

நாகப்பட்டினம் 1991ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. இதுவரலாற்று மற்றும் கலாசார முக்கியத்துவம் கொண்ட ஒரு மாவட்டமாக உள்ளது. சோழ மண்டலத்தில் நாகை மிகவும் புகழ் பெற்றது.

இந்த மாவட்டத்தில், சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார், நாகப்பட்டினம், கீழ்வேளூர் (தனி), வேதாரண்யம் ஆகிய ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன.

இதில் கீழ்வேளூர் தொகுதி 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் நடந்த 2011, 2016 தேர்தல்களில் திமுக ஒரு முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வென்றுள்ளன.

சீர்காழி மற்றும் பூம்புகாரில் தலா 6 முறை வென்ற அதிமுக நாகையில் நான்கு முறையும், வேதாரண்யத்தில் மூன்று முறையும் வெற்றி பெற்றிருக்கிறது. நாகப்பட்டினம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளைவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிக முறை வென்றுள்ளது (6 முறை). திமுகவைப் பொறுத்தவரை வேதாரண்யத்தை 6 முறையும், மயிலாடுதுறையை 5 முறையும், சீர்காழியை 4 முறையும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி வேதாரண்யத்தில் 3 முறை வெற்றியை ருசித்திருக்கிறது. மாவட்டத்தைப் பொறுத்தவரை ஒரு சில தொகுதிகளில் திமுகவும், அதிமுகவும் தங்களது பலத்தை கடந்த காலங்களில் இழந்தே இருந்திருக்கின்றன.

திருவாரூர் மாவட்டம்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வலங்கைமான் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து திருவாரூர், நன்னிலம், குடவாசல், நீடமங்கலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வட்டங்களையும் இணைத்து 1997 அன்று திருவாரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திருவாருர் 9 முதல் 12 ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவில் முதன் முதலாக சோழ ஆட்சியாளர்களின் கீழ் முக்கியத்துவம் பெற்று இருந்ததாக சங்க கால இலக்கியங்கள் கூறுகின்றன.

திருவாரூர் மாவட்டமானது முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதி பிறந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டம், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டது.

கடந்த காலங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், திமுகவும் திருவாரூர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தியிருக்கின்றன. குறிப்பாக திருத்துறைப்பூண்டியில் 1967ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு தேர்தல்வரை இந்திய கம்யூனிஸ் கட்சி 10 முறை வென்று அசுர பலத்துடன் இருக்கிறது. திமுக இரண்டு முறை வென்றிருக்கிறது, அதிமுக ஒருமுறைகூட வென்றதில்லை. அதேபோல், கருணாநிதி பிறந்த ஊரான திருவாரூரில் திமுக 7 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 5 முறையும் வென்றிருக்கின்றன. இங்கும் அதிமுக ஒருமுறைகூட வெல்லவில்லை. குறிப்பாக, இங்கு 1996ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டுவரை திமுகவே தொடர்ச்சியாக வென்று வருகிறது.

நன்னிலத்தில் மட்டுமே அதிமுகவின் வெற்றி சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கிறது. அங்கு அந்த கட்சி நான்கு முறை வென்றிருக்கிறது. அதேசமயம் திமுகவும் 4 முறை வென்றிருக்கிறது. எனவே திருவாரூர் திமுகவுக்கானது என்று கடந்த கால வரலாறு எழுதியிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டம்:

தென் இந்தியாவின் நெற்களஞ்சியம், கட்டடக் கலை என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சாட்சியாக நிற்கும் பெரிய கோயில் அமைந்திருக்கும் ஊர் என பல்வேறு சிறப்புகளை பெற்றிருக்கும் மாவட்டம் தஞ்சாவூர். இந்த மாவட்டத்தில், திருவிடைமருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

டெல்டா மண்டல கடந்த கால வரலாறு

டெல்டா மண்டலத்தின் மற்ற மாவட்டங்களைப் போல இங்கும் உதய சூரியனின் ஒளியே கடந்த காலங்களில் வீசியிருக்கிறது. திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு தொகுதிகளில் திமுக தலா 6 முறை வென்றிருக்கிறது. அதேபோல், திருவையாறு, தஞ்சாவூரை தலா 7 முறை தன்வசம் ஆக்கியிருக்கிறது.

அதிமுகவைப் பொறுத்தவரை பட்டுக்கோட்டையில் 4 முறை, பேராவூரணியில் 5 முறை என இந்த இரு தொகுதிகளிலு மட்டுமே அக்கட்சி திமுகவை முந்துகிறது. அதேபோல், திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளைவிடவும் காங்கிரஸ் பாபநாசத்தில் ஐந்து முறை வென்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம்:

தனி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டை, அரண்மனைகள், கோட்டைகள், கொத்தளங்கள், குகை ஓவியங்கள் மற்றும் பல வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றால் நிறைந்துள்ள மாவட்டம்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது. ஆதி மனிதர்கள் வசிப்பிடமாக திகழ்ந்த இம்மாவட்டத்தின் பல பண்டைய கிராமங்கள் தமிழ் சங்க இலக்கியத்தில் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்மாவட்டமானது, கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது. ஆறு தொகுதிகளில் விராலிமலை தொகுதி 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அந்தத் தொகுதி சந்தித்த இரண்டு தேர்தல்கலிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது.

மற்றபடி, கந்தர்வகோட்டையில் அக்கட்சி இரண்டு முறையும், காங்கிரஸ், திமுக தலா ஒரு முறையும் வென்றிருக்கின்றன. புதுக்கோட்டையில் மூன்று முறை வென்றிருக்கும் திமுக, திருமயம் மற்றும் ஆலங்குடியில் தலா 4 முறை வென்றிருக்கிறது. அதிமுகவைப் பொறுத்தவரை புதுகை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடியில் செல்வாக்குமிக்கதாக கடந்த காலங்களில் இருந்திருக்கிறது. அறந்தாங்கியை 7 முறையும், ஆலங்குடியை 5 முறையும் அக்கட்சி கைப்பற்றியிருக்கிறது. ஒட்டுமொத்த வெற்றி அளவை பார்க்கும்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு கட்சிகளும் சம பலத்திலேயே இருந்திருக்கின்றன.

கடந்த தேர்தல் நிலை:

டெல்டா மண்டலத்தில் திமுகவின் கை கடந்த காலங்கலில் ஓங்கியிருந்தாலும், தமிழ்நாட்டின் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இறங்கியிருக்கிறது. மண்டலத்தில் உள்ள 37 தொகுதிகளில் அதிமுக 22 தொகுதிகளை கைப்பற்றி திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை பரிசாக அளித்தது.

ABOUT THE AUTHOR

...view details