தஞ்சாவூர்: தமிழகத்தில் கடந்த சில மாதங்களில், தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகளை வைத்து விளம்பரங்கள் செய்து, அதன் வாயிலாக திருச்சி, சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், ஈரோடு, புதுச்சேரி, கும்பகோணம் என எட்டு கிளைகளுடன் தமிழகத்தில் விஸ்வரூப வளர்ச்சி கண்ட நகைக்கடை தான் பிரணவ் ஜுவல்லர்ஸ்.
சேதாரம் இல்லை என பெரிய அளவில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து, அவர்களை மாதாந்திர நகை சீட்டில் உறுப்பினர்களாக சேர்த்தும், பலரிடம் நிரந்தர முதலீடாக பெற்றும் குறைந்த காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டது இந்நிறுவனம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்நிறுவனத்தின் ஓர், இரண்டு கிளைகள் திடீரென மூடப்பட்டது.
இந்த தகவல் பெரிய அளவில் வெளியே கசியும் முன்னர், நேற்று முன்தினம் காலை முதல் அனைத்து கிளைகளிலும் பராமரிப்பு பணி, ஒரு சில நாட்களில் கடை திறக்கப்படும், சில கிளைகளில் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை என்று, விதவிதமாக அறிவிப்புகளை ஒட்டி, வாடிக்கையாளர்களை திசை திருப்பினர்.
இந்நிறுவனம் மாதாந்திர நகை சீட்டு மற்றும் வைப்புத்தொகை வாயிலாக பல நூறு கோடி அளவிற்கு தமிழகம் முழுவதும் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே, தஞ்சை முக்கிய சாலையான நாகேஸ்வரன் வடக்கு வீதியில் செயல்பட்டு வந்த பிரணவ் ஜுவல்லர்ஸ் கிளை நேற்று முன்தினம் காலை முதல் திறக்கப்படவில்லை.
பல வாடிக்கையாளர்கள் கடைக்கு வந்து பூட்டியிருப்பது கண்டு ஏமாற்றமடைந்து திரும்பிச் சென்றனர். அதன் பின்னர் தான், அனைத்து கிளைகளும் ஒட்டுமொத்தமாக பூட்டப்பட்ட தகவல் கசிந்து, தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கும்பகோணம் கிளையில், மாதாந்திர நகை சீட்டு மற்றும் வைப்பு நிதியாக அளித்த சுமார் 60-க்கும் மேற்பட்டோர், இந்நிறுவனத்தின் மோசடியால், ஏமாற்றப்பட்டுள்ளதாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் உத்தரவின்பேரில், இவ்வழக்குகளை தற்போது பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கையாளுகின்றனர்.