தஞ்சாவூர்:இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே போதைப் பொருள் பழக்கம் இளைஞர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. இந்த போதைப் பழக்கத்தால் பல இடங்களில் பாலியல் குற்ற சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. போதை பழக்கத்தால் நாடு சீரழிந்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசு, காவல் துறையினருடன் இணைந்து போதைப் பழக்கத்திற்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும், போதைப் பொருட்களை கைப்பற்றி அழிக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தஞ்சாவூர் தனுவர்ஷன் அறக்கட்டளை சார்பில், கல்வியே நாட்டின் அரண், போதைப் பொருள் தடுப்பு, சிறுவர் சிறுமியர் பாலியல் தடுப்பு விழிப்புணர்வு குறித்த மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் மாரத்தான் போட்டி அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 20 ) நடைபெற்றது.
இப்போட்டியினை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன், போக்குவரத்து பிரிவு காவல் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், உள்ளிட்டோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் ஓட்டம் மற்றும் பொதுப்பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு 20 கிலோ மீட்டர் ஓட்டம் நடைபெற்றது.
20 கிலோ மீட்டர் ஓட்ட போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 1 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசாக ரூபாய் 50,000 மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. மேலும் மூன்றாம் பரிசாக ரூ 25 ஆயிரமும், கோப்பையும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:மாற்றத்தை தேடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்- சாதிய அடையாளங்களை அழித்துவரும் கிராம மக்கள்!