தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்களுக்கு இனி ஆடைக் கட்டுப்பாடு தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்றாக விளங்குவது, தஞ்சை பெரிய கோயில். இக்கோயிலானது தமிழர்களின் கட்டடக்கலைக்கு தலைசிறந்த ஒரு எடுத்துக்காட்டாக திகழ்வதோடும், உலகப் பாரம்பரிய சின்னமாகவும் விளங்குகிறது.
மேலும், தஞ்சை பெரிய கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் என அனைவரும் வருகை புரிவது வழக்கம். இந்த கோயிலில் சதய விழா, நவராத்திரி கலை விழா, சித்ரா பௌர்ணமி விழா, ஆஷாட நவராத்திரி விழா, ஐப்பசி மாத அன்னாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், பெரிய கோயிலுக்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் என ஆண்களும், ஒரு சில பெண்களும் அரைக்கால் சட்டை அணிந்து வருகின்றனர். இதனால், மற்ற பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டுகளும், புகார்களும் எழுந்தன.
இதைத் தடுக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நேற்று முதல் ஆடைக் கட்டுப்பாட்டு (Dress Code) அறிவிப்பு பலகையை கோயில் நுழைவாயில், காலணி பாதுகாக்கும் இடம் என இரண்டு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதில், ஆண்கள் வேட்டி, சட்டை, பேண்ட் அணிந்தும்; பெண்கள் புடவை, தாவணி துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் ஆகியவை அணிந்து வர வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் கூறுகையில், "இந்த அறிவிப்பானது வரவேற்கத்தக்கது. பக்தர்களும் இதை கடைபிடிக்க வேண்டும். மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆடைக் கட்டுப்பாட்டை தவிர்த்து கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாட்டை கோயில் நிர்வாகம் செய்ய வேண்டும். அப்போதுதான் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இங்கு உள்ள வணிகர்களுக்கும் பொருளாதார வாய்ப்பு ஏற்படும்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்!