தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேயருக்கே இந்த நிலமையா..! யாரிடம் சென்று கேட்பது என குடந்தை மக்கள் புலம்பல்! - thanjavur district news

கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணனின் வீட்டின் அருகே கழிவுநீர் ஆறாக பெருகெடுத்து ஓடி துர்நாற்றம் வீசி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் மேயர்
கும்பகோணம் மேயர்

By

Published : Jun 21, 2023, 10:55 PM IST

மேயரின் வீடு அருகே ஆறாக ஓடும் கழிவுநீர்

தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சியின் மேயராக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சரவணனும், துணை மேயராக தி.மு.கவை சேர்ந்த சு.ப.தமிழழகனும் உள்ளனர். மேயர் கே.சரவணன், 17வது வார்டு கவுன்சிலராக வெற்றி பெற்று பின்னர் மேயராக தேர்வு செய்யப்பட்டவர். துக்காம்பாளையத்தெரு பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

மேயர் கே.சரவணனின் வீட்டை ஒட்டியுள்ள ஓம்சக்தி நகர், செரீஃப் நகர் என இரு பகுதிகள் உள்ளன. அவற்றில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் ஏழை குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் நெருக்கம் அதிகமாக காணப்படும் குறுகிய பகுதியாகும்.

இப்பகுதியில் அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்புகள் உள்ள நிலையில், இதற்காக வீதிகளில் அங்காங்கே தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. அந்த தொட்டிகளில் கடந்த ஒரு மாத காலமாக அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொட்டிகளில் மேல்பகுதி வழியாக கழிவுநீர் சாலை முழுவதும் வழிந்தோடி, அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுவதுடன், கடும் துர்நாற்றமும் வீசுகிறது.

இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேயரிடமும் மாநகராட்சி நிர்வாகத்திடமும் முறையிட்டதையடுத்து, தற்காலிக தீர்வு மட்டுமே எடுக்கப்படுகிறது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், அவ்வாறு எடுக்கப்படும் தீர்வுகளும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே சீராக இருக்கிறது, பிறகு மீண்டும் பழைய நிலையே நீடிக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு கண்டு, இப்பகுதியின் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதியில் வாழும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேயரின் சொந்த வார்டிலேயே, அதுவும் மேயர் குடியிருக்கும் வீட்டின் அருகிலேயே இப்படி கழிவுநீர் சாலையில் வழிந்தோடி, துர்நாற்றம் வீசுவது பெரும் சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் அதிகம் பரவும் ஆபத்தையும் எதிர்நோக்கி, இங்கு வாழும் முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் என பலரும் கடும் அவதியுற்று வாழ்ந்து வருகின்றனர்.

மேயரிடமே முறையிட்டு, மாநகராட்சி கழிவு நீர் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு காண முடியாமல் இருக்கிறது. மேலும் மேயர் வார்டு என்பதை கூட கண்டுகொள்ளாமல், மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேறு யாரிடம் முறையிடுவது என இப்பகுதியில் வாழும் மக்கள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அமைச்சர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் வெளியேற்றம்.. மயிலாடுதுறையில் சர்ச்சை!

ABOUT THE AUTHOR

...view details