தஞ்சாவூர்:தமிழ்நாட்டில் தமிழின் பயன்பாடு மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது. இதனை மீட்கவும், அனைவரும் தமிழிலேயே பேசவும் நம் குழந்தைகளுக்கு தமிழிலேயே பெயர் சூட்டி மகிழவும், பொங்கு தமிழ் அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், 'தமிழைத்தேடி' எனும் தலைப்பில், சர்வதேச தாய்மொழி தினமான பிப்ரவரி 21ஆம் தேதி சென்னையில் விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை தொடங்கி, தொடர்ந்து 8 நாட்கள் பயணம் செய்து 28ஆம் தேதி சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் நிறைவு செய்ய உள்ளார்.
இதன் ஒருபகுதியாக பயணத்தின் 5-வது நாளான நேற்றிரவு கும்பகோணத்தில், பொங்கு தமிழ் அறக்கட்டளை தலைவர் கோ.க. மணி தலைமையில் நடைபெற்ற தமிழைத்தேடி எனும் விழிப்புணர்வு பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மருத்தவர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.
அப்போது, 'தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், புறநானூறு, அகநானூறு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, திருமுருகாற்றுப்படை, பத்துப்பாட்டு, மதுரை காஞ்சி, உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட ஏட்டளவில் இருந்த நூல்களை அச்சாக்கம் செய்து, அவர் வாழ்ந்த 87 ஆண்டுகளில், தமிழுக்காக, தமிழை வளர்க்க, ஏறத்தாழ 68 ஆண்டுகள் தன்னலமற்ற தொண்டாற்றி பெருமை சேர்த்தவர்.
அத்தகைய பெருமைமிக்க தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் ஊர், கும்பகோணம் அருகேயுள்ள உத்தமதானபுரம். இன்று தமிழ்நாட்டில் தமிழ் எங்குள்ளது என தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. 10 வார்த்தைப் பேசினால் அதில் ஒரு வார்த்தை தான் தமிழில் உள்ளது. அதுவும் கொச்சைத் தமிழாக உள்ளது. இனியாவது நாம் வீடுகளில் தமிழில் பேச வேண்டும். நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டி மகிழ வேண்டும். இதன் மூலம் அன்னைத் தமிழை மீட்டெடுக்க முடியும்.