தஞ்சாவூர்: நாஞ்சிக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் மருத்துவர் புண்ணியமூர்த்தி. இவர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும், மரபுசார் மருத்துவ பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பேராசிரியர் ஆவார். சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பிவிஎஸ்சி எம்விஎஸ்சி பட்டம் பெற்றுள்ளார்.
பின்னர் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆய்வு பட்டப் படிப்பில் தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். நவீன கால்நடை மருத்துவத்தில் பட்டம் பெற்று இருந்தாலும், கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவரது முயற்சியால், 8 லட்சத்துக்கு மேற்பட்ட கறவை மாடுகளின் 40 வகையான நோய்களுக்கு மூலிகை மருத்துவத்தின் மூலம் 80லிருந்து 82 சதவிகிதம் வரை குணப்படுத்த முடியும் என்று அறிவியல் ரீதியாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் மூலிகை மருத்துவம் இருக்க முடியும் என்றும், பாரம்பரிய சித்த மருத்துவத்தின் மூலம் கால்நடைகளுக்கு வரும் நோய்களை முழுமையாகக் குணப்படுத்த முடியும் என்றும் நிரூபித்துக் காட்டியுள்ளார். கால்நடைகளுக்கு வரும் நோய்களுக்கு மூலிகை மூலம் மருத்துவச் சிகிச்சை அளிப்பது குறித்து கால்நடை வளர்ப்பவர்களுக்கு தற்போது இலவச ஆலோசனையும் வழங்கி வருகிறார்.