தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள வள்ளிகொல்லைக்காடு கிராமத்தில் சில மாதங்களுக்கு முன் ஆறடி உயர பழங்கால ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. சிலைத் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலர் பொன் மாணிக்கவேல் தலைமையில், இந்தச் சிலை அதிராம்பட்டினம் அபய வரதீஸ்வரர் கோயில் பெட்டக அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இதனைச் சிலைத் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பாதுகாத்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வருவாய்த் துறை அலுவலர்கள், அறநிலையத் துறை அலுவலர்கள், காவல் துறையினர் சிலையை வேறு இடத்திற்கு கொண்டுசெல்வதற்காக, சிலையை எடுப்பதற்கு முயன்றனர். தகவல் அறிந்ததும் இந்து முன்னணி தஞ்சை மாவட்ட பொதுச்செயலாளர் விஜயகுமார் தலைமையில் இந்து முன்னணியினர், பக்தர்கள் அலுவலர்களை முற்றுகையிட்டு சிலையைக் கொண்டுபோகவிடாமல் தடுத்துநிறுத்தினர்.