தஞ்சாவூர்: அதிமுக கட்சி சார்பில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரைப் பெற முயற்சி மேற்கொள்ளாமலும், உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசைக் கண்டித்தும், குறுவை சாகுபடி மேற்கொண்ட சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ 35 ஆயிரம் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், விவசாயிகளுக்குத் துரோகம் இழைத்த திமுக அரசைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். பின்னர் திமுக அரசைக் கண்டித்தும், கர்நாடக அரசைக் கண்டித்தும் கட்சியினர் கோஷம் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ் ”டெல்டா மாவட்டத்திற்கு உரியத் தண்ணீரைப் பெற்றுத் தருவதற்கு முதலமைச்சர் தவறிவிட்டார். கர்நாடக அரசிடம் உரியக் காலங்களில் தண்ணீர் பெற்றுத்தரத் தவறியதால் சுமார் 3.5 லட்சம் ஏக்கர் கருகிப் போய்விட்டது. இதனால் சம்பா சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது.
ஆகவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ 35 ஆயிரம் இழப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டாதது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது” என்று தெரிவித்தார்.