தஞ்சாவூர்:தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என முன்னாள் தஞ்சை மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் ஜெய்லா உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் வேண்டுதல் வைத்து, நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என, தேமுதிகவினர் பல்வேறு கோயில்களில் அவருக்காக சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, முன்னாள் தஞ்சை மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் ஜெய்லா ஏற்பாட்டின் பேரில், மாநகர் மாவட்ட செயலாளர் கோ.சங்கர் தலைமையில், கும்பகோணம் காமராஜர் சாலையில் உள்ள அரைகாசு அம்மாள் தர்காவில், விஜயகாந்த் விரைந்து பூரண நலம் பெற வேண்டி சிறப்பு பிராத்தனையுடன் பாத்தியா ஓதி, துஆ செய்யப்பட்டது.