தஞ்சாவூர்:கடந்த சில நாள்களாக தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இரண்டு நாள்களாக் 80-க்கும் கீழ் சென்ற பாதிப்பு, 100-க்கும் மேல் கடந்து செல்கிறது.
நேற்று (ஆகஸ்ட் 1) ஒரு நாள் மட்டும் தஞ்சாவூரில் 126 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் தோறும் கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
62 இடங்களில் ஆய்வு
அதன் ஒரு பகுதியாக இன்று (ஆகஸ்ட் 2) தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அலுவலர்கள், 62 இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
மேலும் லாரி, பேருந்து, ஆட்டோ போன்ற வாகனங்களில் முக கவசம் அணியாமல் வந்தவர்களை மாவட்ட ஆட்சியர் விரட்டிப் பிடித்து அபராதம் விதித்தார்.
விரட்டிப் பிடித்து அபராதம்
இதில் தஞ்சாவூர் தொம்பன் குடிசை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அப்பகுதியில் வந்த இருசக்கர வாகனம், பேருந்து, லாரி, ஆகியவற்றில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை விரட்டிப் பிடித்து, அந்த இடத்திலேயே அபராதம் விதித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
4 கோடி ரூபாய் வரை அபராதம்
அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர்... மேலும் பேருந்தில் முகக்கவசம் அணியாமல் இருந்த நடத்துநருக்கும் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, “தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 2) 62 இடங்களில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் கரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும். மேலும் தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 4 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மதிப்பெண்களைக் குறைத்த பள்ளி - முற்றுகையிட்ட பெற்றோர்