தஞ்சாவூர்:தீண்டாமையின் வேறுபாடு குறித்து இந்து தர்மம் கூறவில்லை என்றும் தமிழகத்தில் தான் அதிகளவு தீண்டாமை நடப்பதாகவும் குடிநீரில் மலத்தை கலப்பது போன்ற செயல்களும் ஜாதி அடையாளங்களை அணிந்து கொள்பவர்களும் இங்கு தான் அதிகம் உள்ளனர் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே ஒழுகச்சேரி கிராமத்தில் தமிழ் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற சிவகுலத்தார் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் விழாவில் பேசுகையில், "ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கோயில்கள் நம் கலாசாரத்தின் அடையாளமாக இருந்து வருகிறது.
கோயில் என்பது வெறும் வழிபாட்டு தலமாக மட்டுமல்லாமல், அது நம் கலாசாரம், வாழ்க்கையுடன் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்தது. இந்த பாரத நாடு மன்னர்களால் உருவாக்கப்படவில்லை. ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவாக்கப்பட்ட பெருமைமிகு நாடு. இது தர்மத்தின் அடிப்படையில் அறம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து இமயமலை வரை பாரதம் ஒன்றுபட்ட குடும்பமாகவே திகழ்கிறது.
பாரதத்தின் வலிமை பாரத தர்மத்தில் இருந்து உருவானது. இந்து தர்மத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த நாட்டில் யாரும் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்பது கிடையாது. வெவ்வேறு மதம், இனம் பழக்க வழக்கங்கள் கொண்டு இருந்தாலும் அனைவரும் தர்மத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டவர்கள். இதன் அடிப்படையில் பாரதம் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
கில்ஜி, துக்ளக், கால்டுவெல், ஜி.யு. போப் உள்ளிட்டோர் வந்து நம்முடைய தர்மத்தை சீரழிக்க நினைத்தாலும், யாராலும் வெற்றி பெற முடியவில்லை. பாரதிய தர்மம் நம்முடைய இதயத்தில் ஒன்றி இருப்பதே அதற்கு காரணம். ஆனால் பிரிட்டிஷ்காரர்கள் நம்முடைய ஆன்மீகம், மொழி, பண்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றனர்.