தஞ்சாவூர்:கும்பகோணம் சட்டமன்றத் தொகுதி சார்பில், அதிமுகவின் 52வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் கும்பகோணம் பழைய மீன் அங்காடி பகுதியில் நடைபெற்றது.
முன்னாள் எம்.எல்.ஏ.வும் அதிமுகவின் மாநகர செயலாளருமான ராமநாதன் தலமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதிமோகன் முன்னிலை வகித்தார். இதில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகியவர்கள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டார்.
அவர்கள் அனைவரையும் தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதிமோகன் மாநகர செயலாளர் ராமநாதனும் சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் இக்கூட்டத்தில் திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்போது அவர் பேசுகையில், "அதிமுகவை தொடங்கிய புரட்சி தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அதிமுக என்ற கட்சியே கிடையாது என பேசினார்கள்.
அதை உடைக்கும் விதமாக கரோனா நெருக்கடி காலத்திலும் கூட 4 ஆண்டுகள் சிறப்பான பொற்கால ஆட்சியை தந்தவர் புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி. அவர் ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் போது எவ்வளவு போராட்டம், கட்சியில் இருந்தவர்கள் கூட எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பல்வேறு சதி வேலைகளை செய்தார்கள். அதை அனைத்தையும் கடந்து ஆட்சி செய்தார்.