சிறுவயதில் நம்மிடம் நீ என்னவாக ஆகப்போகிறாய் என்று கேட்டால்? யோசிக்காமல் டாக்டர் ஆவேன், இன்ஜினியர் ஆவேன் என்று கூறுவோம். இது நம்மைச் சுற்றிய கனவு. ஆனால், நம்மைப் பெற்றவர்களோ கலெக்டராக்க வேண்டும் என்ற கனவோடு இருப்பார்கள்.
அதற்காக எப்போதும் 'நல்லா படிச்சு கலெக்டராகணும்... விளையாட்டா சுத்தாத' என்று காலை, மாலை ஏன் தூங்கச் செல்லும்போதும்கூட மந்திரமாக ஓதுவார்கள். புத்தகத்தைக் கையிலெடுக்காமல் விளையாட்டாக நாம் சுற்றித்திரிந்தாலும் சரி, டிவியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும் சரி சட்டென்று நம் அப்பா வாயிலிருந்து வரும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.
அதற்கான காரணம் அப்போது நமக்கு விளங்காவிட்டாலும், வயது அதிகரிக்க அதிகரிக்க தெளிவு பிறக்கும். 'நாம்தான் சிறுவயதில் படிக்காமல் விளையாட்டாகச் சுத்திட்டோம்... நம்ம புள்ளய படிக்க வச்சாவது மத்தவங்க முன்னாடி தலைநிமிர்ந்து போகணும்' என்ற அவர்களின் எண்ணம்தான் அவ்வாறு அவர்கள் கூறுவதற்கு காரணம் என்பது நமக்குப் புலப்படும்.
அவ்வாறு பெற்றோரின் வார்த்தைகளைப் புரிந்துகொண்டு வாழ்க்கையில் மிகுந்த அர்ப்பணிப்போடு படித்து சார் ஆட்சியராக உயர்ந்த ஒருவரின் திருமணத்தைப் பற்றியும், அத்திருமணத்திற்காக மணப்பெண்ணிடம் அவர் கேட்ட ’வித்தியாசமான’ வரதட்சணையைப் பற்றியும்தான் பார்க்கப்போகிறோம்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள மேல ஒட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சிவகுரு பிரபாகரன். மாரிமுத்து ஏழ்மையான நிலையிலிருந்து வந்தாலும் தனது மகனைப் படிக்கவைத்து பெரிய அலுவலராக ஆக்க வேண்டும் என்பதே பெரும் கனவாக இருந்துள்ளது. அதனால், சிறுவயது முதலே தனது மகனுக்குப் படிப்பதற்கு ஊக்கமளித்தார்.
தந்தை கொடுத்த ஊக்கம் சிவகுரு பிரபாகரனின் மனதில் ஆழப்பதிந்து சாதிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வைத் தூண்டியுள்ளது. அந்த உள்ளுணர்வின் வீச்சு அவரை ஐஏஎஸ் தேர்வு எழுதும் அளவிற்குத் தூண்டியுள்ளது. தன்னுடைய ஏழ்மை நிலையைக் கருத்தில்கொண்டு, தந்தையின் லட்சிய வெறியைத் தனக்குள் பாய்ச்சி இரவுபகல் பாராமல் அயராது படித்து தன்னைத் தேர்வுக்குத் தயார்படுத்திக் கொண்டுள்ளார்.
கடின உழைப்பு என்றும் தோற்றுப்போவதில்லை என்ற வரிகளுக்கு மற்றுமொரு சான்றாக சிவகுரு பிரபாகரன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற்றார். தற்போது அவர் திருநெல்வேலி மாவட்டத்தின் சார் ஆட்சியராகப் பணிபுரிந்துவருகிறார்.
தந்தையின் லட்சியத்தையும் நிறைவேற்றியாயிற்று, வாழ்க்கையிலும் நல்ல நிலையை அடைந்தாயிற்று திருமண வயதும் வந்தாயிற்று. பிறகென்ன, வாழ்வைப் பகிர்ந்துகொள்ளவதற்கு ஒரு சக உயிரை நம்முடன் இணைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
மகனுக்காகப் பெண் பார்க்கும் படலத்தை சிவகுருவின் பெற்றோர் தொடங்கினர். ஆனால், சிவகுருவோ சற்றே ஆச்சரியமான நிபந்தனை ஒன்றை விதித்தார். தனக்கு வரும் மனைவி ஒரு மருத்துவராக இருக்க வேண்டும் என்றும், அவர் வரதட்சணையாக வாரத்தில் இரு நாள்கள் தான் பிறந்த ஒட்டங்காட்டிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு இலவச மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதுமே அந்த நிபந்தனை.
நாட்டின் மக்கள் தொகையில் ஆண்களின் விகிதம் பெண்களின் விகிதத்தைவிட அதிகமாக இருப்பதால், நிபந்தனை இல்லாமல் பெண் தேடினாலே, மணப்பெண் கிடைப்பது குதிரைக்கொம்பாக உள்ளது. சிவகுருவோ இப்படியொரு நிபந்தனை விதிக்க, ஒரு வருடத்திற்கு மேல் அவருக்கான இணை கிடைக்காமலேயே இருந்துள்ளது.
ஐஏஎஸ் அலுவலர் என்பதால், பல படித்த பெண்களும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் படித்த பெண்களும் மணமகளாய் வர தயாராக இருந்தும், 'ஒரு மருத்துவரைத்தான் திருமணம் செய்வேன்' என்று உறுதியாக இருந்தார். இதை மனதில்கொண்டு அவர்களுடைய பெற்றோர் மருத்துவம் படித்த பெண்ணை கடந்த ஓராண்டு காலமாகத் தேடிவந்த நிலையில் மருத்துவம் படித்த பல பெண்கள் கிடைத்தும், இவருடைய நிபந்தனைகளைக் கேட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.
பெண் கிடைக்காமல் போனாலும், தான் விதித்த நிபந்தனையில் பின்வாங்காத சிவகுருவின் மனநிலையை ஒத்த மருத்துவப் படிப்பு முடித்த, கணித பேராசிரியரின் மகள் கிருஷ்ண பாரதி என்ற பெண் கிடைத்தார். அவரது நிபந்தனையை ஏற்ற கிருஷ்ண பாரதிக்கும் சிவகுருவுக்கும் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணமான இரு நாள்களே ஆன நிலையில், சிவகுரு குறித்து அறிந்த தஞ்சையிலுள்ள பேராவூரணி அருகே உள்ள சின்ன தெற்கு காடு கிராம மக்கள் கல்வி சீர்வரிசை விழாவில் பங்கேற்க அவரையும் அவரது மனைவியையும் அழைத்துள்ளனர். கிராம மக்களின் அழைப்பே ஏற்று நேற்று அங்கு சென்ற புதுமணத் தம்பதி, விழாவில் கலந்துகொண்டனர்.
அக்கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் மாணவர்களின் பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் இணைந்து சீர்வரிசை எடுத்துச் சென்றனர். சிவகுரு பிரபாகரன் - கிருஷ்ண பாரதி தம்பதியின் முன்னிலையில் ஒட்டங்காடு கடைத்தெருவிலிருந்து மேளதாளத்துடன் பள்ளிக்குத் தேவையான பீரோ, சேர், எழுதுப் பொருள்கள் உள்ளிட்டவைகளைச் சீர்வரிசையாக எடுத்துச் சென்றனர். அனைவரையும் பள்ளித் தலைமையாசிரியரும் பிற ஆசிரியர்களும் இன்முகத்தோடு வரவேற்றனர். பின்பு சீர்வரிசைப் பொருள்களைப் பொதுமக்கள் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தனர்.
இக்காலத்திலும் இப்படி ஒரு அலுவலர் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. அதுவும் டெல்டா பகுதியில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நேர்மையாய், மக்கள் மீது அன்பு கொண்டவராய் இருப்பது என்பதில் பெருமைப்படுவதாக ஒட்டங்காடு கிராம மக்கள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.
திருநெல்வேலி சார் ஆட்சியரின் இந்த முன்னெடுப்பு, இளைஞர்கள் பலருக்கு ஊக்கமளிப்பதாகவும், மக்களுக்காக உழைக்கும் எண்ணத்தை வரவழைப்பதாகவும் உள்ளதாக கிராம மக்கள் பாரட்டிவருகின்றனர். சார் ஆட்சியரின் இந்தச் செயலுக்காக, மக்கள் அவரைப் பாராட்டு மழையில் நனையவைத்து-வருகின்றனர்.
இதையும் படிங்க:கீற்றுக் கொட்டகை டூ கலெக்டர் ஆபிஸ்: இளைஞனின் சாகசப் பயணம்!