தஞ்சாவூர்:தென்னக திருப்பதி என்று போற்றப்படும் 108 வைணவ தலங்களில் ஒன்றான ஒப்பிலியப்பன் கோயிலில் உள்ள வேங்கடாசலபதி சாமி கோயிலில், இன்று (ஜன.01) 2024 ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்கும் மூலவர் வேங்கடாசலபதி சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களில் சிறப்புடைய தலமாகவும், 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் விளங்குவது கும்பகோணம் அருகேயுள்ள திருவிண்ணகர் என போற்றப்படும், ஒப்பிலியப்பன் கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சாமி கோயிலாகும். இத்தலத்தை பொய்கையாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகிய நால்வரும் போற்றிப் பாடியுள்ளனர்.
திருப்பதி வேங்கடாஜலபதி சாமியைப் போன்றே இத்தலத்து இறைவனும் வரப்பிரசாதியாக, வேங்கடாசலபதி என்ற திருபெயருடனும், புராணங்களில் ஸ்ரீனிவாசன் எனும் திருநாமம் கொண்டும், மூலவர் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்திலும், தாயார் பூமிதேவி வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்திலும் அருள் பாலிக்கின்றனர். மார்கண்டேய மகரிஷி அமர்ந்து கன்னிகாதானம் செய்யும் கோலத்திலும் உள்ளார்.