தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளை காக்க 'பயிர் காப்பீடு திட்டம்' அறிமுகம் செய்ய வேண்டும் - விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் யோசனை! - latest news in tamil

தமிழக விவசாயிகளை காக்க, முதலமைச்சரின் பயிர் காப்பீடு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்திட வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன்
காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 8:51 PM IST

காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன்

தஞ்சாவூர்: நாட்டிலேயே முன்னோடி திட்டமான மருத்துவ காப்பீடு திட்டத்தை, தமிழக அரசு வெற்றிகரமாக செயல்படுத்துவதை போல, தமிழக விவசாயிகளை காக்க, முதலமைச்சரின் பயிர் காப்பீடு திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்திட வேண்டும் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் தமிழக அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “தமிழக விவசாயிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கான பயிர் காப்பீடு இல்லாத சூழலில், இவ்வாண்டு காவிரி நீர் போதுமான அளவிற்கு கிடைக்காமலும், போதுமான மழை இல்லாத நிலையில் குறுவை சாகுபடி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு காப்பீடு இல்லாததால் சம்பா சாகுபடி தொடங்குவதற்கு பெரும் நெருக்கடியையும், இழப்பினையும் சந்திக்க வேண்டியிருந்தது.

இந்நிலையில், சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடிக்கான பயிர் காப்பீடு செய்ய காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆனால் தீபாவளி பண்டிகை காலம் என்பதால் இணைய தளம் வாயிலாக பதிவேற்றம் செய்வதில் சில ஏற்பட்டடுள்ளது. இதனால் உரிய காலத்திற்குள் அனைத்து விவசாயிகளாலும் பயிர் காப்பீடு செய்ய முடியவில்லை. ஆகவே தமிழக அரசு, இதனை வருகிற 30ம் தேதி வியாழக்கிழமை வரை கால நீட்டிப்பு செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

தமிழக விவசாயிகள், பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு பிரீமியமாக ரூபாய் 2 ஆயிரம் கோடி வரை செலுத்துகின்றனர். ஆனால் விவசாயிகள் பாதிக்கப்படும் போது, அவர்கள் அனைவருக்கும் முழுமையான காப்பீடும் கிடைப்பதில்லை. உரிய காலத்திலும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. கடந்த முறை இழப்பீடு தொகையாக விவசாயிகளுக்கு ரூபாய் 536 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு, எப்படி நாட்டிற்கே முன்மாதிரியாக மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை வெற்றிகரமாக செயல்படுத்துகிறதோ, இந்திய உணவு கழகம் மூலம் நடைபெற்று வந்த நெல் கொள்முதலை, தமிழக அரசு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் சிறப்பாக செயல்படுத்துகிறதோ, அதைப் போலவே, முதலமைச்சர் பயிர் காப்பீடு திட்டம் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

பயிர் காப்பீட்டு பிரீமியத்தொகை பிற காப்பீட்டு நிறுவனங்களுக்கு செல்லாமலும், அதே வேளையில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான இழப்பீடு விரைந்து கிடைக்க இத்திட்டம் வாயிலாக வாய்ப்பு ஏற்படும்” என்றும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன் யோசனை தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க:தஞ்சையில் தூய்மைப் பணியாளர்களுக்கு அசைவ விருந்தளித்து அசத்திய தனியார் தொண்டு நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details