திருச்சி ஐஸ்வர்யம் சிட் ஃபண்ட் மோசடி பணத்தை மீட்கக்கோரி சிபிஎம்எல் ஆர்ப்பாட்டம்! தஞ்சாவூர்:திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு திருவெறும்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி எனப் பல்வேறு கிளைகளுடன் 'ஐஸ்வரியம் சிட் ஃபண்ட் பி லிமிடெட்' என்ற நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது.
இதன் உரிமையாளர் திருச்சியைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா மற்றும் மேலாளர் நரேந்திரன் ஆகிய இருவரும் சேர்ந்து, தங்கள் நிறுவனத்தில் நிரந்தர வைப்பு நிதியாக 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 4000 ரூபாய் வட்டி தருவதாக நூற்றுக்கணக்கானோரிடம், ஆசை வார்த்தைகள் கூறி, கோடிக்கணக்கான ரூபாய்களை வசூல் செய்து கொண்டு, கடந்த ஏப்ரல் மாதம் திடீரென அனைத்து கிளைகளையும் மூடி தலைமறைவாகினர்.
இதுகுறித்து கும்பகோணத்தில் பாதிக்கப்பட்டோர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், 50 லட்சத்திற்கும் அதிகமான ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து கும்பகோணம் டிஎஸ்பி மகேஷ் குமார் தலைமையிலான தனிப்படை, திருச்சியில் பதுங்கியிருந்த உரிமையாளர் ராஜேஷ் கண்ணாவையும் மன்னார்குடியில் இருந்த மேலாளர் நரேந்திரனையும் கைது செய்து தற்சமயம் சிறையில் உள்ளனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் சிபிஎம்எல் சார்பாக, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் தொகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் கைது செய்யப்பட்ட இருவரது சொத்துக்களையும் முடக்க வேண்டும்; பாதிக்கப்பட்டோருக்குரிய தொகை வழங்கும் வரை இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது, இவ்வழக்கில் தொடர்புடைய பலரை விரைந்து கைது செய்ய வேண்டும்; ஐஸ்வர்யம் சிட் ஃபண்ட் நிறுவனத்திற்கான உரிமத்தை ரத்து செய்திட வேண்டும்;
கும்பகோணம் உள்ளிட்ட தமிழகத்தில் பல இடங்களில் இத்தகைய மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதன் உரிமங்கள் பெறும்போது ஒரு சில சீட்டு நடத்துவதாகக் கூறி விட்டு சட்டவிதிகளை மீறி, பல சீட்டுகள் நடத்துகின்றனர்.
எனவே, இது குறித்து தனி அலுவலரை நியமித்து தொடர்ந்து இத்தகைய நிறுவனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில், மாநகர செயலாளர் ஆர் மதியழகன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனியார் கல்லூரி ரவுண்டானாவில் இருந்து செங்கொடி ஏந்தி, பேரணியாக கோரிக்கை முழக்கங்களை எழுப்பியபடி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்த பிறகு, இது குறித்த கோரிக்கை மனுவை கோட்டாட்சியரிடம் வழங்கினர்.
இதையும் படிங்க :சாலையோர வியாபரிகளிடம் கட்டாய வசூல் வேட்டை; சேலத்தில் நடப்பது என்ன..?