"ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜியை ED விசாரிக்க ஒரு முறை இருக்கு" - சிபிஎம் பாலகிருஷ்ணன் விமர்சனம்! தஞ்சாவூர்:இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் தற்போது நீர்மட்டம் குறைவாக உள்ளதால், நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு வற்புறுத்த வேண்டும்.
குறுவை சாகுபடிக்குத் தேவையான பயிர் கடன்களை வழங்க வேண்டும். குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீட்டு திட்டங்கள் செய்யவில்லை. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் சம்பா சாகுபடிக்கு மட்டுமே காப்பீடு செய்கின்றன. ஆகவே, தமிழ்நாடு அரசே காப்பீட்டு திட்டத்தை உருவாக்கி, பதிவு செய்து குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசு விலை பொருளுக்கு உரிய விலையை அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு ஆளுநர், வள்ளலாருக்கு காவி உடை போத்துவது முறையல்ல. அது வன்மையான கண்டனத்துக்கு உரியது. ஆளுநர் இது போன்ற போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒட்டு மொத்தத்தில் தமிழ்நாட்டில் ஆளுநரை எதிர்த்து தமிழ்நாடு தழுவிய இயக்கம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என்ற நிலையை உருவாக்கி வருகிறார்.
மேலும், தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலனை புறக்கணிக்கக் கூடிய, மாநில சுயாட்சியைப் புறக்கணிக்கிற, தொடர்ந்து இந்தியை பல்வேறு முறைகளில் திணிக்கக் கூடிய பாஜகவுடன் அதிமுக கூட்டணி போவது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படுகின்ற துரோகம்.
கூட்டுறவுத் துறையில் நடைபெற்றுள்ள முறைகேட்டிற்கு உடனடியாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டு உண்மைதான். அந்த ஊழல் குற்றச்சாட்டு மீது வழக்கு நடத்தி நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட வேண்டும். செந்தில் பாலாஜியை பாதுகாப்பதற்காக நாங்கள் கண்டிக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
அவர் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டை விசாரிப்பதோ, அதில் நீதிமன்றத்தில் தண்டனை கொடுப்பதையோ நாங்கள் குறுக்கே நிற்கவில்லை. ஆனால், குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை விசாரிக்க ஒரு முறை உள்ளது. அந்த முறையை மனித உரிமைகளை மீறி அமலாக்கத்துறை செயல்படுகிறார்கள் என்பதுதான் எங்களுடைய விமர்சனம்" என தெரிவித்தார். இந்த பேட்டியின்போது மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், செயற்குழு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: "100 ஏக்கர் கொடுத்த எங்களுக்கு 2 ஏக்கர் கொடுக்க அரசு யோசிக்கிறது" - சாருபாலா தொண்டைமான் வேதனை