கும்பகோணம் அடுத்த பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சோமு - மீனா தம்பதி. இவர்கள் மருமகன் ரமேஷ். மூவரும் கும்பகோணம் பாலக்கரையில் உள்ள தனியார் உணவகத்தில் சமையல் வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக பேருந்துகள் இயங்காததால் மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கும்பகோணத்திற்கு பணிக்குச் சென்று வந்துள்ளனர்.
நேற்று (மே.31) அதிகாலை வழக்கம்போல் மூவரும் ஒரே வாகனத்தில் வேலைக்குச் சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தை கள்ளப்புலியூர் அருகே ரமேஷ் ஓட்டிச் சென்ற போது, கும்பகோணத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற கார் இவர்கள் மீது வேகமாக மோதியது.
இதில் சோமு-மீனா தம்பதி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வாகனத்தை ஓட்டிச் சென்ற ரமேஷ் பலத்த காயம் அடைந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தாலுகா காவல் துறையினர், இருவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த ரமேஷை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுநர் கோபிநாத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனாவால் உயிரிழக்கும் செய்தியாளர்களின் வாரிசுகளுக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாக உயர்வு!