கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில், அதிகபட்சம் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும், திருமண மண்டபங்களில் விழா நடைபெறக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அதில் முக்கியமானவை.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோட்டூரைச் சேர்ந்த காசிநாதன் மகன் முத்துராஜா, அதே பகுதிக்கு அருகேயுள்ள ஒழுகுச்சேரி பகுதியைச் சேர்ந்த குபேந்திரன் மகள் விசாலாட்சி ஆகியோருக்கு ஆடுதுறையில் தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெறுமென முன்னதாகவே முடிவு செய்யப்பட்டது. ஆனால், நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, எளிய முறையில் திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.
இதையடுத்து, உறவினர்கள் பத்து பேர் முன்னிலையில், ஆடுதுறை நெல்லிமரத்து மகாமாரியம்மன் கோயிலில் இன்று திருமணம் நடந்தது. இந்தத் திருமண விழாவில், மணமக்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர். விழாவுக்கு வந்திருந்த உறவினர்கள் அனைவருக்கும் முகக்கவசங்களையும் அவர்கள் வழங்கினர்.