தஞ்சாவூர் மாவட்டம் சுந்தரம் நகரைச் சேர்ந்த ஒருவர் டெல்லியில் நடைபெற்ற சமய மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியுள்ளார். இவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாமோ என்ற அச்சத்தால் மாவட்ட நிர்வாகம் அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரியில் தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், இவரது வீட்டிலுள்ள நிறைமாத கர்ப்பிணியான மருமகள் உள்ளிட்ட அனைவரையும் மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தியுள்ளது. அவரது ரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில், நேற்று மதியம் இடுப்பு வழி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக, இவருக்கு இரு குழந்தைகள் அறுவைச் சிகிச்சை மூலம் பிறந்துள்ளதால் தற்போதும் அறுவைச் சிகிச்சை மூலமே குழந்தையைப் பிரசவிக்க வைக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சூழலில் நேற்று மாலை 1.2 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையிலிருந்து வந்த ரத்தப் பரிசோதனையில் அவர் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது தாயும்சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் பிறந்த பெண் குழந்தை!