தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் ஆர்.என்.ரவி RSS-ன் கொள்கை பரப்பு செயலாளர் - கே.எஸ்.அழகிரி சாடல்! - Governor of tamilnadu

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக கொள்கை பரப்பு செயலாளர் கூட இல்லை, ஆர்எஸ்எஸ் கொள்கை பரப்பு செயலாளராக காட்சியளிக்கிறார். ஆகையால் அவரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதே என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

ஆளுநர் ஆர்எஸ்எஸ்-ன் கொள்கை பரப்பு செயலாளர்: அழகிரி குற்றச்சாட்டு
ஆளுநர் ஆர்எஸ்எஸ்-ன் கொள்கை பரப்பு செயலாளர்: அழகிரி குற்றச்சாட்டு

By

Published : Dec 9, 2022, 10:30 PM IST

தஞ்சாவூர்:தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி இன்று நண்பகல் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அன்னை சோனியா காந்தியின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கும்பகோணம் காந்தி பூங்கா எதிரேவுள்ள ஜனரஞ்சனி ஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு மாவட்ட தலைவர் டி.ஆர் லோகநாதன் தலைமை வகிக்க, கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே.சரவணன் முன்னிலையில், மாநில தலைவர் கே.எஸ் அழகிரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அதில் சலவை தொழிலாளர்கள் 10 பேருக்கு இஸ்திரிப் பெட்டிகளையும், ஏழை எளிய பெண்கள் 76 பேருக்கு சேலைகளையும் வழங்கினார்.

முன்னதாக கும்பகோணம் மாநகருக்கு வருகை தந்த அழகிரிக்குப் பட்டாசுகள் கொளுத்தியும், ஆளுயர மாலை அணிவித்தும், சால்வைகள் அணிவித்தும், நடராஜர் சிலை பரிசளித்தும், பேண்டு வாத்தியங்கள் இசைத்தும், காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் (திமுக) கூட்டணிக் கட்சி தலைவர் என்ற முறையில், அழகிரிக்கு சால்வை அணிவித்து வரவேற்று மகிழ்ந்தார். நிகழ்விற்கு முன்னதாக, தமிழ்நாட்டின் பழமையான நூலகமான கும்பகோணம் கோபால்ராவ் நூலகத்திற்கு சென்று பார்வையிட்டார்.

செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ் அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றத் தொகுதிக்கு நூறு இடங்களில் கட்சி கொடி ஏற்றுவது என மாநிலம் முழுவதும் 23,400 இடங்களில் கொடி ஏற்றும் செயல்திட்டத்தை வகுத்துள்ளது. இதன் வாயிலாக காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி 25 சதவீதம் அளவிற்கு உயரும் என நம்புகிறோம்.

மு.க ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு அதிக கவனமும், முக்கியத்துவமும் கொடுத்து செயல்படுத்தி வருகிறது. முந்தைய மழை வெள்ள பாதிப்புகளை விரைந்து சீர்செய்ததை போல, தற்போது எதிர்நோக்கியுள்ள மழை வெள்ளத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாக எதிர்கொள்ளும் என நம்புவதாக கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தான், வேறு யாரும் செய்யாத வகையில் துணிச்சலாகப் பிரதமர் மோடிக்கு எதிராக 3 முக்கிய தீர்மானங்களைச் சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியவர். பாஜகவிற்கு இறங்கு முகம் தொடங்கி விட்டது, பாஜக இமாச்சல பிரதேசம் மற்றும் வட மாநில இடைத்தேர்தல் தோல்விகளின் வாயிலாக அறியலாம். இது 2024 பொது தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னோட்ட வெற்றியாக அமையும்.

ஆளுநர் ஆர்எஸ்எஸ்-ன் கொள்கை பரப்பு செயலாளர்: அழகிரி குற்றச்சாட்டு

குஜராத் மாநில வெற்றி கூட நீர்க்குமிழி போன்ற தற்காலிக வெற்றி தான். அங்கு மதவெறியைக் கிளப்பி, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி, விருப்பாதவர்களை கூட மறைமுகமாக வாக்களிக்க வைத்து விட்டதனால் கிடைத்த வெற்றி. இருப்பினும் இந்த பாஜக வெற்றியை, காங்கிரஸ் ஏற்றுக்கொள்கிறது.குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மியின் வெற்றி தற்காலிகமானது தவிர கொள்கை சார்ந்த வெற்றி அல்ல. உள்ளூர் சூழலுக்கு ஏற்ப அவர்களுக்கு வெற்றி கிடைத்தது, இது நீடித்திருக்கும் என தெரியவில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. அதுபோல பாஜகவும், அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. இருப்பினும் நாங்கள் (காங்கிரஸ்) 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்றோம், பெற்ற வாக்கு சதவீதம் 72 ஆகும்.

ஆனால் அவர்கள் (பாஜக) 23 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றார்கள். தற்போதைய தலைவரும், முன்னாள் தலைவரும் தோல்வி அடைந்தார்கள் எனவே தமிழ்நாட்டில், பாஜக பலமடையவில்லை. முன்னைவிட தற்போது அதிகமாகப் பலவீனம் தான் அடைந்துள்ளார்கள். ஒரு கட்சியின் வளர்ச்சியும், பலமும் தேர்தல் வெற்றியை முன்வைத்தே கணக்கிடப்படும், வெறும் மேடைப் பேச்சுக்கள், அறிக்கைகளை வைத்து அல்ல.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி 100 சதவீதம் அரசியல் செய்கிறார். குறிப்பாகக் கோவை சிலிண்டர் வெடி குண்டு சம்பவத்தில், அவர் பொது வழியில் காவல்துறை விசாரணைக்கு 4 நாட்கள் தாமதமானதாகவும், இதனால் முக்கிய தடயங்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறிய செயல் நிரூபிக்கிறது.

இதன் மூலம் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு காவல்துறை மீது தேசத்துரோக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சரையோ, தலைமைச் செயலாளரையோ, காவல்துறைத் தலைவரையோ அழைத்து பேசி இருக்கலாம். மாறாக இப்படி பொது வழியில் பேசியதன் மூலம் அவர் இதனை உள்நோக்கத்துடனே பேசியிருப்பதால், அவர் பாஜக கொள்கை பரப்பு செயலாளர் கூட இல்லை. ஆர்எஸ்எஸ் கொள்கை பரப்பு செயலாளராக காட்சியளிக்கிறார் ஆகவே ஆளுநரைத் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையதே என்று கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.

இதையும் படிங்க: கன்னியாகுமரியில் கடலில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

ABOUT THE AUTHOR

...view details