தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ளது பண்ணவயல் ஊராட்சி. இந்தக் கிராமத்தில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. தற்போது காவிரி நீர் கடைமடை பகுதிகளை அடைந்ததாலும் இப்பகுதிகளில் தொடர் மழை பெய்துவந்ததாலும் ஏரி குளங்களில் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது. இருந்தும் இந்த ஏரி, குளங்கள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இருந்துவருகிறது. இதில் உள்ள ஆகாயத்தாமரை, குப்பைகள் தண்ணீரை மாசுபடுத்துவதால் அந்தத் தண்ணீரை மக்கள் உபயோகப்படுத்த முடியாமல் இருக்கிறது.
இதனையடுத்து தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரி மாணவர்கள் இங்கு உள்ள குளங்களில் உள்ள ஆகாயத்தாமரை, குப்பைகளை அகற்றி ஏரி, குளங்களை தூய்மைப்படுத்துவது என முடிவுசெய்தனர். முதல்கட்டமாக பண்ணவயல் கிராமத்திலுள்ள வண்ணான் குளத்தை சுத்தம் செய்ய அவர்கள் களமிறங்கினர்.
கடந்த ஒருவார காலமாக இந்த முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர்களை கண்டு அந்த ஊர் இளைஞர்கள் தாங்களாக முன்வந்து இந்த சமூகப் பணியில் தங்களையும் இணைத்துக்கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.