தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே ஆரியப்படைவீடு ஊராட்சிக்குட்பட்ட தென்னூர் கிராமத்தில், ரூபாய் 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில், 500 மெட்ரிக் டன் அளவிலான சேமிப்புக் கிடங்குடன் கூடிய (துணை வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்) புதிய கட்டடத்தை இன்று முற்பகல் சென்னையில் இருந்தவாறு காணொலி வாயிலாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதனையொட்டி, இன்று சம்மந்தப்பட்ட தென்னூர் சேமிப்புக் கிடங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் காணொலியை நேரில் காணும் வகையில், பெரிய திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், திமுக தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம், தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி செழியன், கும்பகோண கோட்டாட்சியர் பூர்ணிமா, ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் மாலினி உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது திடீரென மின் தடை ஏற்பட்டதால், பெரிய திரையில் காட்சி தடைப்பட்டது. இருப்பினும் நிலைமையை மடிக்கணினி உதவியோடு, சமாளித்து காணொலி காட்சியைத் தொடர்ந்து பார்த்து, முதலமைச்சர் தொடங்கி வைத்த பிறகு, தென்னூர் சேமிப்புக் கிடங்கில், குத்து விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது.