தஞ்சாவூர்: லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் சினிமா விநியோகம் ஆகியவற்றின் மூலம் பிரபலமானவர் கே.முரளிதரன் (65). இவர் கடந்த 1994ஆம் ஆண்டு சரத்குமாரை வைத்து அரண்மனை காவலன் மூலம் சினிமா தயாரிப்பை தொடங்கினார்.
அதன்பின் விஜய், அஜித், கமல், பிரபுதேவா, ஸ்ரீகாந்த், ஜெயம்ரவி உள்ளிட்ட முக்கிய நடிகர்களை கொண்டு கோகுலத்தில் சீதை, பிரியமுடன், வீரம் விளைஞ்ச மண்ணு, உன்னை தேடி, ஒருவன், உனக்காக எல்லாம் உனக்காக, பகவதி, அன்பே சிவம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சிலம்பாட்டம், சகலகலா வல்லவன், அப்பாடக்கர் என பல வெற்றி படங்கள் உட்பட தமிழ் சினிமாவில் கடந்த 28 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட படங்களை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
இவருக்கு கோகுல் மற்றும் ஸ்ரீவத்சன் என இரு மகன்கள் உள்ளனர். இதில் கோகுல் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இளைய மகன் ஸ்ரீவத்சன் மருத்துவராக சேவையாற்றி வருகிறார்.
இவர் வழக்கமாக இரு மாதங்களுக்கு ஒரு முறை கும்பகோணம் பகுதியில் உள்ள முக்கிய கோயில்களை தரிசனம் செய்யது வழக்கம். ஆனால் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா காரணமாக வரமுடியாத சூழலில் நேற்று முன்தினம் (நவ.29) இரவு தனது மனைவி உத்ராவுடன் (60), கும்பகோணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதியில் தங்கி விட்டு நேற்று கோனேரிராஜபுரம் நடராஜர், திருநள்ளார் சனிபகவான், பட்டீஸ்வரம் துர்க்கையம்மன், ஒப்பிலியப்பன்கோயில் ஸ்ரீ வேங்கடாசலபதி சுவாமியையும் தரிசித்தனர்.